லண்டன்: கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் பெரியம்மை, தொண்டைக் கரப்பான் (டிப்தீரியா) போன்ற நோய்களுக்கு எதிராக குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் பெரும் சரிவைச் சந்தித்தது.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில் அவ்விகிதம் மீட்சி அடையத் தொடங்கியதாக ஐக்கிய நாட்டு சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்தியா, இந்தோனீசியா போன்ற நாடுகளில் அம்மீட்சி விகிதம் அதிகமாகவும் சிறிய, ஏழை நாடுகளில் அது குறைவாக இருந்தது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டது.
சென்ற ஆண்டில் 20.5 மில்லியன் குழந்தைகள் குறைந்தது ஒரு குழந்தைப் பருவத் தடுப்பூசியைத் தவறவிட்டனர். இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 24.4 மில்லியனாகவும் 2019ஆம் ஆண்டில் 18.4 மில்லியனாகவும் இருந்தது.
மொத்தம் 183 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் யுனிசெஃப் அமைப்பு செவ்வாய்க்கிழமை தனது அறிக்கையை வெளியிட்டது.
உலக அளவில், கொவிட்-19 தொற்றுக்கு முந்திய காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் 86 விழுக்காடாகவும் 2022ஆம் ஆண்டில் 84 விழுக்காடாகவும் இருந்தது.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது மீட்சி கண்டுள்ளது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
ஆயினும், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோருக்குத் தடுப்பூசி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்றும் அவர் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

