ஆட்கடத்தல்: குழந்தைகள் உட்பட 73 பேரை மீட்ட மலேசிய அதிகாரிகள்

2 mins read
ad72b1b7-bf32-4b73-b215-49eee74b23b8
மலேசியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் 113 பேரைத் தடுத்து வைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். - படம்: ஜேஎஸ்ஜே பிடிஆர்எம்/ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்து 73 பேரை மீட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 12ஆம் தேதி மீட்கப்பட்டோரில் குழந்தைகள் 22 பேரும் உடற்குறையுள்ளோர் மூவரும் அடங்குவர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘ஆப்ஸ் மெகா பின்டாஸ்’ எனும் அமலாக்க நடவடிக்கையின்போது அவர்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்டோரில் 25 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள், 22 பேர் குழந்தைகள் என்று அரச மலேசியக் காவற்படையின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுத் துணை இயக்குநர் ஃபடில் மார்சஸ் கூறினார்.

“பாதிக்கப்பட்டோரில் மலேசியர்கள் மட்டுமன்றி பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, பங்ளாதேஷ், கம்போடியா, மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்,” என்று அரச மலேசியக் காவற்படைத் தலைமையகத்தில் ஜூன் 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மீட்கப்பட்டோரில் உடற்குறையுள்ள மலேசிய மாது ஒருவர் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பங்ளாதேஷ் நாட்டவர்களான உடற்குறையுள்ள ஆடவர் இருவர் பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் திரு ஃபடில் மார்சஸ் சொன்னார்.

இல்லப் பணியாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள், உணவகம், முடிதிருத்தும் கடை போன்றவற்றிலும் பொற்கொல்லர்களிடமும் வேலைசெய்தோர் எனப் பலர் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அமலாக்க நடவடிக்கையின்போது, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 113 பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் திரு ஃபடில் தெரிவித்தார். அவர்களில் மலேசியர்களும் பங்ளாதேஷ், இந்தோனீசியா, சீனா, தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவர் என்றார் அவர்.

அமலாக்க நடவடிக்கையில், அரச மலேசியக் காவல்துறையின் குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவு அதிகாரிகளுடன் காவல்துறையின் இதர பிரிவுகளையும் குடிநுழைவுத் துறை உட்பட மற்ற அமலாக்க அமைப்புகளையும் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய திரு ஃபடில், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கும் கும்பல்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆட்கடத்தல் தொடர்பான தகவல்கள் ஏதுமிருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்