கோலாலம்பூர்: மலேசியத் தந்தைக்கும் வெளிநாட்டுத் தாய்க்கும் பிறந்த இருவர், மலேசியக் குடியுரிமை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அவர்கள் பிறந்தபோது, மலேசியக் குடிமக்களான அவர்களின் தந்தையர், வெளிநாட்டைச் சேர்ந்த அவர்களது தாய்மார்களை அதிகாரபூர்வமாகத் திருமணம் செய்யவில்லை என்பதால் குடியுரிமைபெற உரிமையில்லை என்று நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை22) தீர்ப்பளித்துள்ளது.
கோலாலம்பூரில் பிறந்த ‘ஜே’ என்ற பெண் தம் இந்தோனீசியத் தாயின் குடியுரிமையையும் பேராக் தெலுக் இந்தானில் பிறந்த ‘டி’ என்ற ஆடவர் தமது பிலிப்பீன்ஸ் தாயின் குடியுரிமையையும் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால், இருவரின் அன்னையரும் சிறுவயதிலேயே அவர்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். இருவரும் தங்கள் மலேசியத் தந்தையரின் பராமரிப்பில் வளர்ந்து, வாழ்நாள் முழுவதையும் மலேசியாவிலேயே கழித்து, படிப்பையும் முடித்துள்ளனர். அவர்கள் தங்கள் தாயாருடன் தொடர்பில் இல்லை, அவர்களது நாட்டுக்கும் சென்றதில்லை.
அவர்கள் பல ஆண்டுகளாகக் குடியுரிமைப் பெற போராடி வருகிறார்கள்.
கடந்த மாதமும் இதே காரணத்தால் மூவரின் குடியுரிமை மேல்முறையீட்டை அந்த அமர்வு நிராகரித்திருந்தது.
அவர்களில் ஒருவரான ஹரிதரன் முகுந்தன் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறினார்.

