தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்துத் திடல் மீது ஏவுகணைத் தாக்குதல்; சிறுவர்கள் பலர் உயிரிழப்பு

2 mins read
ff6f5ea5-d80e-4766-bc22-f5c9538b6ce3
தாக்குதலில் உயிரிழந்தோர் 10 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று இஸ்‌ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: இபிஏ

ஜெருசலம்: இஸ்‌ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் ஹைட்சில் காற்பந்துத் திடல் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 12 பேர் மாண்டதாக இஸ்‌ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் டுருஸ் இன மக்கள் அதிகம் வாழும் மஜ்டால் ஷாம்ஸ் பகுதியில் நடத்தப்பட்டது.

மாண்டோரில் சிறுவர்களும் இளையர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலில் உயிரிழந்த பத்து சிறுவர்களின் பெயர்களையும் வயதையும் இஸ்‌ரேல் வெளியிட்டது.

அவர்கள் 10 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று இஸ்‌ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலை ஈரானின் ஆதரவுடன் லெபனானிலிருந்து இஸ்‌ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளது.

சிறுவர்களின் உயிரைப் பறித்த தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்துள்ளார்.

கோலான் ஹைட்சில் நடத்தப்பட்ட இத்தாக்குதலை அடுத்து, பிரதமர் நெட்டன்யாகு தமது அமெரிக்கப் பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு இஸ்‌ரேல் திரும்பியுள்ளார்.

அவரது தலைமையின்கீழ் இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சு அவசரக்கூட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிஸ்புல்லாவுக்கு எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று நம்பப்படுகிறது.

தாக்குதலுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஹிஸ்புல்லா கூறுவதை இஸ்‌ரேல் நம்பவில்லை.

“தாக்குதல் நடத்தவில்லை என்று ஹிஸ்புல்லா கூறுகிறது. ஆனால் அந்த அமைப்புதான் இந்தப் படுகொலைக்குக் காரணம். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஈரானில் தயாரிக்கப்பட்டது. அத்தகைய ஏவுகணைகள் ஹிஸ்புல்லாவைத் தவிர வேறு எந்தப் பயங்கரவாத அமைப்பிடமும் இல்லை,” என்று இஸ்‌ரேலிய வெளியுறவு அமைச்சு கூறியது.

இந்தச் சம்பவம் காரணமாக இஸ்‌ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, ஹிஸ்புல்லா படைகளைக் குறிவைத்து லெபனானில் வான்வழித் தாக்குதல்களை ஜூலை 28ஆம் தேதியன்று நடத்தியதாக இஸ்‌ரேலிய விமானப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்