கலிபோர்னியா: சிறார்கள் சமூக ஊடகப் பயன்பாட்டால் ஒரு வகையில் அடிமைகளாக ஈர்க்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பைத் திசைதிருப்பிப் பங்கம் விளைவித்து, அவர்களின் தரவுகளை முறையின்றி சேகரித்ததாக மெட்டா நிறுவனத்தின்மீது பல அமெரிக்க மாநிலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.
அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர 29 மாநிலங்களுக்கென மெட்டா நிறுவனம் அதிகபட்சமாக ஏறத்தாழ S$21.21 மில்லியன் (US$16.68 பில்லியன்) வரை மொத்த இழப்பீட்டுத் தொகையாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதோடு, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் சிறார்களுக்கென பயன்பாட்டு விதிமுறைகளை ஏற்படுத்தவும் மெட்டா ஒப்புக்கொண்டது.
அதன்படி அமெரிக்காவில் அவற்றைச் சிறார்கள் அன்றாடும் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடும், இரவு நேரங்களில் தடையும் விதிக்கப்படும். பெரியோர்களுக்கான தனிப்பட்டப் பதிவுகளைக் காணச் சிறுவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
இந்தத் தீர்வின் விளைவால் அமெரிக்க மாநிலக் கூட்டரசுகள் தொடுத்த உயர்மட்ட வழக்குகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.
சிறார்களுக்கு கேடு விளைவிக்கும் விதமாக சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படுவதாக பல தரப்புகளில் இருந்து வைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் 29 மாநிலங்கள் மெட்டா நிறுவனத்தின்மீது வழக்குகள் தொடுத்தன.
மெட்டாமீது வழக்கு தொடுத்த ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவற்றை முடித்துவைக்க ஏறத்தாழ S$584.07 மில்லியன் (US$459.3 மில்லியன்) தொகையை அந்நிறுவனம் இழப்பீடாக வழங்கும்.


