சான்டியாகோ: தனக்குத் தரப்பட வேண்டிய சம்பளத்தைப்போல் 330 மடங்கு பணம் தன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதும், அதனை முழுவதுமாக எடுத்துக்கொண்டு கம்பி நீட்டினார் ஊழியர் ஒருவர்.
இச்சம்பவம் தென்னமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் நிகழ்ந்தது.
அங்குள்ள ‘சியால் அலிமென்டோஸ்’ என்ற இறைச்சி நிறுவனத்தில் அந்த ஆடவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு 500,000 பெசோ (S$713) சம்பளம் வழங்க வேண்டிய நிலையில், சம்பளப் பட்டியலில் இடம்பெற்ற தவறால் 165,398,851 பெசோ (S$235,943) அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இச்சம்பவம் கடந்த 2022 மே மாதம் நிகழ்ந்த நிலையில், அது மீண்டும் இணையத்தில் பரவலாகி வருகிறது.
பெயர் தெரிவிக்கப்படாத அந்த ஊழியர், தனக்கு வரவேண்டிய சம்பளத்தைப்போல் 330 மடங்கு பணம், தன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக நிறுவன நிர்வாகியிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக வழங்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தர ஏதுவாக, வங்கிக்குச் சென்று அதற்கான நடைமுறைகளைத் தொடங்கும்படி அந்த ஊழியரை நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு கேட்டுக்கொண்டது.
மறுநாளே அப்பணியை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார். ஆனாலும், அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை. தொலைபேசி அழைப்புகளுக்கும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. சில மணி நேரம் கழித்து நிறுவனத்தைத் தொடர்புகொண்ட அவர், தான் உறங்கிவிட்டதாகக் கூறினார்.
பின்னர் தன் வழக்கறிஞர் மூலமாக பணிவிலகல் கடிதம் அனுப்பிய அவரை அதன்பிறகு தொடர்புகொள்ளவே முடியவில்லை.
அதனையடுத்து, நிறுவனம் அவர்மீது குற்றவியல் புகார் அளித்ததாக ‘இண்டிபென்டன்ட் இண்டி’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் இல்லை.