மதுவில் ‘சிறுநீர்’: மன்னிப்பு கேட்ட நிறுவனம்

மதுவில் ‘சிறுநீர்’: மன்னிப்பு கேட்ட நிறுவனம்

1 mins read
400 டன் மூலப்பொருள் கொட்டி அழிப்பு
c2b14795-ddce-4616-afd8-669a64f161a3
சீனாவின் புகழ்பெற்ற ‘பீர்’ பானங்களில் ஒன்றாக சிங்தாவ் இருந்து வருகிறது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவில் மது தயாரிக்கும் ஆலை ஒன்றில், மூலப்பொருள் இருந்த கொள்கலனில் ஊழியர் ஒருவர் சிறுநீர் கழித்த காணொளி வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஊழியரைக் காவல்துறை கைதுசெய்துவிட்டதாக ‘சிங்தாவ்’ மது ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த ஊழியரின் செயலுக்காக, ‘பீர்’ தயாரிக்கும் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

நிர்வாக நடைமுறைகளில் இடைவெளி இருப்பதை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், உற்பத்திச் செயல்பாடுகளை முறைப்படுத்தப்படும் என்றும் இனியொருமுறை அத்தகைய சம்பவம் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

உள்ளூர்க் காவல்துறையும் சந்தை ஒழுங்குமுறை அதிகாரிகளும் அடங்கிய புலன்விசாரணைக் குழு, கடந்த புதன்கிழமை இச்சம்பவம் குறித்த விவரங்களை வெளியிட்டது.

சென்ற மாதம் 19ஆம் தேதி, சரக்கு வாகனத்திலிருந்து மூலப்பொருள்களை இறக்கும்போது, குய் என்ற அந்த ஆடவர் அதில் சிறுநீர் கழித்தார்.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் வெளிநிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்பட்ட, கிட்டத்தட்ட 400 டன் எடைகொண்ட ‘மால்ட்’ மூலப்பொருள் முழுவதுமாக முத்திரையிடப்பட்டு, பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்தாவ் ஆலையின் பங்குவிலை தொடர்சரிவைச் சந்தித்து வருகிறது.

1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்தாவ், சீனாவின் புகழ்பெற்ற ‘பீர்’ பானங்களில் ஒன்று.

குறிப்புச் சொற்கள்