சிப்பாங்: விமானத்திற்குள் தொல்லை ஏற்படுத்திய சீனத் தம்பதி அந்த விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்தச் சம்பவம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2ல் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நிகழ்ந்ததாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய காவல்துறைத் தலைமை அதிகாரி அஸ்மான் ஷரியத் கூறினார்.
சீனாவின் ஜியேயாங் நகருக்குச் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் இருந்த பெண் பயணி தேவையின்றி கூச்சல் போட்டு குழப்பம் ஏற்படுத்தத் தொடங்கினார்.
“இதர பயணிகளுக்குத் தொல்லை தரும் வகையில் அவர் மூடத்தனமாக நடந்துகொண்டார். அதனால், அவரையும் அவருடன் இருந்த ஆண் நண்பரையும் பாதுகாவல் அதிகாரிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றினர்,” என்று திரு அஸ்மான் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
“காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவ்விருவரும் அங்கேயும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டனர். அதனால் சுகாதார அமைச்சு அதிகாரிகளின் உதவி நாடப்பட்டது. அவர்கள் விரைந்து மயக்கமருந்து கொடுத்து அவ்விருவரையும் கட்டுப்படுத்தினர்.
“அவர்களின் உளவியல் நிலையைப் பரிசோதிக்க சிர்டாங்கில் உள்ள சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பாக கைது நடவடிக்கை எதுவும் நிகழவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

