தோக்கியோ: முடங்கிப்போன ஃபுக்குஷிமா டய்ச்சி அணு மின் ஆலையில் சேர்ந்துள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டு 30 ஆண்டு காலத்தில் பசிபிக் பெருங்கடலில் விடப்படும் என்று பிரதமர் யோஷிஹிடே சுகாவின் அரசாங்கம் தீர்மானித்தது.
ஆபத்தான கதிரியக்க பொருட்கள் நீரிலிருந்து அகற்றப்பட்ட பின்னரே பெருங்கடலில் சுமார் இரண்டு ஆண்டுகளில் நீரை விடும் திட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டது.
ஆலையில் சேர்ந்துள்ள சுமார் 1.25 மில்லியன் கன மீட்டர் தண்ணீருடன் என்ன செய்வது என்று பல ஆண்டுகளாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக அணுசக்தி நிறுவனத்தின் ஆதரவு ஜப்பானுக்கு இருந்தாலும் உள்ளூர் மீனவர்களுக்கு இம்முடிவில் உடன்பாடு இல்லை.
தங்களின் கடல்சார் உற்பத்தி தொடர்பில் இருந்துவரும் நற்பெயருக்கு இதனால் சேதம் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதற்கிடையே சீனா, தென்கொரியா நாடுகளும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
முடிவு எடுப்பதற்கு முன் வெளிப்படைத்தன்மையின்றி ஆலோசனை நாடாமல் நடந்துகொண்ட ஜப்பானை இரு நாடுகளும் சாடியுள்ளன.
இந்நிலையில் பெருங்கடல் என்பது அனைவருக்கும் பொது உடைமை என்றும் இவ்வாறு அணுக்கழிவு நீரை ஜப்பான் வெளியேற்றுவது 'மிகவும் பொறுப்பற்ற' ஓர் அணுகுமுறை என்றும் சீனா குறை கூறியுள்ளது.

