சீனாவில் புதிய வகை கொவிட்-19 கிருமி: ஏழு பேரைத் தொற்றியது

1 mins read
d22ae755-b9c5-4a91-b3f7-e72516737c0f
புதிய வகை ஜேஎன்.1 கொவிட்-19 கிருமி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சிலும் பரவத் தொடங்கி உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: வேகமாக உருவெடுத்து வரும் புதிய வகை கொவிட்-19 கிருமி சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது. ஜேஎன்.1 எனப்படும் அந்த கிருமியால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோயத் தடுப்பு நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்தத் துணைக் கிருமியின் பரவல் வேகம் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சீனாவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிருமியாக இது மாறும் சாத்தியம் இருப்பதாகக் கூறினர்.

அமெரிக்காவிலும் இந்தப் புதிய வகைக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு பரவும் கிருமி வகைகளில் ஐந்தில் ஒன்று ஜேஎன்.1 கிருமி என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு நிலையம் மதிப்பிட்டு உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரை இக்கிருமி அதிகம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்ட பிஏ.2.86 துணைக் கிருமியோடு தொடர்புடையது இந்தப் புதிய ஜேஎன்.1 கிருமி.

முதன்முதலாக லக்ஸம்பர்க்கில் அடையாளம் காணப்பட்ட இக்கிருமி வகை பின்னர் பிரிட்டன், ஐஸ்லாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பரவத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்