சீனா: காரை ஏற்றி பலரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனா: காரை ஏற்றி பலரைக் கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

20 Jan 2025 - 5:28 pm

1 mins read

பெய்ஜிங்: சீனாவில் ஒரு விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி பலரைக் கொன்ற ஆடவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஃபான் வெய்சியூ, 62, என்ற அந்த ஆடவர் கடந்த 2024 நவம்பர் 11ஆம் தேதி ஸுஹாய் நகரில் உடற்பயிற்சித் தடத்தில் தமது காரை ஓட்டிச் சென்று, அங்கிருந்தோர்மீது மோதியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்; 43 பேர் காயமடைந்தனர்.

கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஆகக் கொடூரமான தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

ஃபான் பின்னர் தன்னைத்தானே கத்தியால் தாக்கிக்கொண்டதாகவும் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டதாகவும் சம்பவம் நேர்ந்த சமயத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது.

மனைவியைச் சட்டரீதியாகப் பிரிந்தபின் மேற்கொள்ளப்பட்ட சொத்துப் பகிர்வு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ஃபான், ஆத்திரத்தில் அந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) அது நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சீனாவில் முன்பின் தெரியாதவர்கள்மீது 19 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
சீனாதாக்குதல்மரண தண்டனை