வாஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் நேரில் சந்தித்து நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலக நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் பெருகியுள்ளது.
மாறாக, அதிபர் டிரம்ப், சொந்த மண்ணில் சரிந்துள்ள ஆதரவைச் சமாளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக, வாஷிங்டனில் இந்த வாரம், இரு தலைவர்களுக்கு இடையில் நடைபெறவிருக்கும் உச்சநிலைச் சந்திப்பில் சமரசம் செய்துகொள்ள திரு ஸி அவசரப்படப்போவதில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தைவான் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் சந்திப்பில் எழக்கூடும் என்றபோதும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இதற்குமுன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பதில்தான் முக்கியக் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான முன்னேற்றங்களோ உடன்பாடுகளோ எட்டப்படுவதற்கான எதிர்பார்ப்புகளை வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறைத்துக் காட்ட முயன்றுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடுகள், பொருள்களின் வர்த்தகம் தொடர்பான சில சாத்தியமான ஒப்பந்தங்களைத் தயாரிக்கும் நோக்கில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட்டும் சீனத் துணைப் பிரதமர் ஹே லிஃபெங்கும் நியூயார்க்கில் ஆயத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவுடன் வர்த்தகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதிலிருந்து ஈரான், உக்ரேன் போர்கள், பேச்சு சுதந்திரம் தொடர்பான ஐரோப்பாவுடனான மோதல்கள் எனப் பல்வேறு வெளிநாட்டுக் கொள்கை சார்ந்த போர்களில் திரு டிரம்ப்பின் கவனம் திசை திரும்பியுள்ளது.
இதற்கிடையே, சீனாவும், மெதுவடைந்த உள்நாட்டுத் தேவை, நீண்டகாலமாக நீடிக்கும் சொத்துச் சந்தை நெருக்கடி போன்ற தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது.
அப்படியிருந்தும், சீனாவின் ஏற்றுமதித் துறை அதிவேகமாக வளர்த்துவருவதால் பொருளியல் வல்லுநர்கள் ‘சைனா ஷாக் 2.0’ என்று அதை வருணித்துவருகின்றனர்.
சீனாவின் உலகளாவிய வர்த்தக உபரி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக $1 டிரில்லியனைத் தாண்டும் வேகத்தில் உள்ளது.
