பெய்ஜிங்: சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே புதிதாக அமைக்கப்பட்ட யாலு நதிப் பாலம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) திறக்கப்பட உள்ளதாகச் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வர்த்தகத்துடன் இருதரப்பு மக்களின் நலனையும் மேம்படுத்த அப்பாலம் உதவும் என்கிறது சீனா.
நான்கு தடங்களைக் கொண்ட அந்த 3,026 மீட்டர் நீளப் பாலத்தின் கட்டுமானம் 2014ஆம் ஆண்டு நிறைவடைந்தது. எனினும், வடகொரியப் பகுதியில் இணைப்புச் சாலைகளும் சுங்கச் சாவடி வசதிகளும் இல்லாததால் அது தாமதமாகத் திறக்கப்படுவதாகத் தென்கொரியச் செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
சீனாவின் வடகிழக்கு எல்லை நகரமான டண்டோங்கை உலக நாடுகளிலிருந்து தனிமைப்பட்டுள்ள வடகொரியாவுடன் இணைக்கும் இப்புதிய பாலம், இரு நாடுகளிடையேயான பொருளியல் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், இது குறைந்த கொள்ளளவு கொண்ட சீனா - கொரியா நட்புறவுப் பாலத்திற்கு ஒரு மாற்றாகவும் மாற்று வழியாகவும் அமையும் எனக் கருதப்படுகிறது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகத் தனது எல்லைகளை முழுமையாக மூடியிருந்த வடகொரியா, ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த மார்ச் மாதத்தில்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவையை மீண்டும் தொடங்கியது.
வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே முதல் சாலைப் பாலம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இப்புதிய பாலத்தின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகொரியா, சீனக் குடிமக்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்கும் நடவடிக்கையை இன்னும் தொடங்கவில்லை.
