ஊழல், மோசடி: 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனம்

ஊழல், மோசடி: 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனம்

1 mins read
7d50a230-714b-4452-b538-4007becbcb24
டென்சென்ட் நிறுவனத்தில் தற்போது 100,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: முன்னணிச் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட், ஊழல், பணம் கையாடல் போன்ற வழிகளில் மோசடி செய்த 120க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கடந்த 2023ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்தது.

உலகின் ஆகப் பெரிய காணொளி விளையாட்டு உருவாக்க நிறுவனமாக விளங்குகிறது டென்சென்ட். ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள அந்நிறுவனமே ‘வீசேட்’ என்ற புகழ்பெற்ற சமூக ஊடகச் செயலியின் உரிமையாளர்.

இந்நிலையில், டென்சென்ட் நிறுவனத்தில் ஊழலின் அளவு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருப்பதாகக் கடந்த 2022 மே மாதம் அதன் நிறுவனர் போனி மா குறிப்பிட்டிருந்தார். ஊழலில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், சென்ற ஆண்டு மட்டும் 70க்கும் மேற்பட்ட நடத்தை விதிமீறல்கள் இடம்பெற்றதாக டென்சென்ட் தெரிவித்தது.

“120க்கும் மேற்பட்டோர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 20 விதிமீறல்கள் குறித்து உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கப்பட்டது,” என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) ஓர் அறிக்கை வாயிலாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

குற்றச் செயலில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒருவருக்கு நாலாண்டு சிறைத்தண்டனையும் 100,000 யுவான் (S$18,870) அபராதமும் விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

டென்சென்ட் நிறுவனத்தில் தற்போது 100,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்