அமெரிக்கத் தொலைத்தொடர்புத் தடைக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்கத் தொலைத்தொடர்புத் தடைக்கு சீனா கடும் கண்டனம்

மாதிரிப்படம்: ஊடகம்

22 Nov 2026 - 3:26 pm

2 mins read

பெய்ஜிங்: சீனத் தொலைத்தொடர்புப் பெருநிறுவனங்கள் அமெரிக்கத் தொலைபேசி எண்களை நேரடியாக அணுகுவதைத் துண்டிக்கும் வாஷிங்டனின் அண்மைய நடவடிக்கைக்குப் பெய்ஜிங்கின் வர்த்தக அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று கடும் கண்டனம் தெரிவித்தது. இம்முடிவு ‘தீய நோக்கம் கொண்டது’ என்றும் அது சாடியுள்ளது.

சட்டவிரோதத் தானியங்கி அழைப்புப் பிரசாரங்களுக்குக் காரணமான ‘தீய சக்திகள்’ அமெரிக்கத் தொலைபேசி எண்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க மத்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் (Federal Communications Commission) நவம்பர் 19ஆம் தேதி நடத்திய வாக்கெடுப்பில் இவ்வுத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான சைனா யூனிகோம், சைனா டெலிகோம், சைனா மொபைல் ஆகிய சீனாவின் மூன்று மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

“எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி, சீனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களை இழிவாகச் சித்தரிப்பதற்கும், தீய நோக்கத்துடன் அவற்றை ஒடுக்குவதற்கும் ஆணையம் முயன்றுள்ளது. இது பாகுபாடற்ற தன்மை, நியாயமான போட்டி ஆகிய கொள்கைகளை மீறும் செயலாகும்,” என்று பெய்ஜிங்கின் வர்த்தக அமைச்சு இணைய அறிக்கையில் தெரிவித்தது.

தொலைத்தொடர்புத் துறையில் உறவுகளைத் துண்டிக்கும் ஆணையத்தின் அண்மைய நடவடிக்கைகள், இரு நாட்டுத் தலைவர்களும் எட்டிய முக்கியக் கருத்திணக்கத்திற்கு எதிரானவை என்றும், சீன-அமெரிக்கப் பொருளியல், வர்த்தக உறவுகளின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கின்றன என்றும் அது கூறியது.

இந்நடவடிக்கைகளை வாஷிங்டன் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சு, சீனாவும் தனக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என எச்சரித்தது.

ஷென்சென்னில் இவ்வாரம் நடந்த வட்டார உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வரவேற்ற சீன அதிபர் ஸி ஜின்பிங், வாஷிங்டனுடனான உறவு நிலையாகவும் மேம்பட்டும் உள்ளதாகப் பாராட்டிய நிலையில் இவ்விமர்சனம் வந்துள்ளது.

அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் ‘அழைப்புகளை உருவாக்கும் அமைப்புகள்’ அதிகரித்துள்ளதால் நாட்டின் குரல்வழிப் பிணையங்களைப் (voice networks) பாதுகாப்பதில் புதிய சவால்கள் எழுந்துள்ளதாக ஆணையத்தின் உத்தரவு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்