வாஷிங்டன்: சீனாவின் செயற்கை நுண்ணறிவுத் துறையைச்(ஏஐ) சேர்ந்த உயர்மட்ட தொழில்முனைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தளம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சீன ஏஐ நிபுணர்கள், நாட்டின் முன்னேற்றம் குறித்த ரகசியத் தகவலை வெளியிடலாம் என்று அதிகாரிகள் கவலைப்படுவதே அதற்கு காரணம்.
ஏஐ நிர்வாகிகள் தடுத்து வைக்கப்பட்டு அமெரிக்க-சீனா பேச்சுவார்த்தைகளின்போது பேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் சீன அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
முதல் தவணைக்காலத்தில் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின்போது வாஷிங்டனின் வேண்டுகோளின்பேரில் கனடாவில் ஹுவாவெய் நிர்வாகி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதுபோல சம்பவங்கள் நடக்கலாம் என்று பெய்ஜிங் எதிர்பார்க்கிறது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் கேட்டதற்கு வெள்ளை மாளிகையோ, சீனாவின் மாநில தகவல் மன்றமோ உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ஏஐ மற்றும் உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த இயந்திரவியல் தொழில்களின் முன்னணி சீன நிறுவனங்களின் நிர்வாகிகள், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அவசியமின்றி பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயணத்தை மேற்கொள்ள விரும்பும் நிர்வாகிகள், புறப்படுவதற்கு முன்பும் திரும்பிய பிறகும் தகவல் தெரிவிக்குமாறும் அங்கு என்ன செய்தீர்கள், யாரைச் சந்தித்தீர்கள் என்பவனவற்றை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஏஐ தொழில்முனைப்பு நிறுவனமான ‘டீப்சீக்’ நிறுவனர் லியாங் வென்ஃபெங் பிப்ரவரியில் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடந்த ஏஐ உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை நிராகரித்ததாக ஒர் அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு பெரிய சீன ஏஐ தொழில்முனைப்பு நிறுவனரும் பெய்ஜிங்கின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 2024ல் திட்டமிடப்பட்ட அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி மேலும் தெரிவித்தது.

