பெய்ஜிங்: காஸாவின் ராஃபா நகரில் தனது ராணுவ நடவடிக்கையைக் கூடிய விரைவில் நிறுத்துமாறு சீனா இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சண்டை நிறுத்தப்படாவிட்டால், கடுமையான மனிதாபிமான பேரிடர் ஏற்படக்கூடும் என்று அது எச்சரித்தது.
“ராஃபா பகுதியில் உள்ள மேம்பாடுகளை சீனா அணுக்கமாகக் கவனித்துவருகிறது. சீனா அனைத்துலகச் சட்டத்தை மீறும் செயல்களையும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களையும் எதிர்த்து, அவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கிறது,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இஸ்ரேல், ராஃபா நகரில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், ஹமாசுடன் சண்டைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள அதற்கு அனைத்துலக நெருக்கடி அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் சண்டைநிறுத்தத்திற்கு ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி ராஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய திடீர் நடவடிக்கையில், இரண்டு பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்; கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்தத் திடீர் நடவடிக்கை மிகச் சரியாக மேற்கொள்ளப்பட்டது என்று பாராட்டினார். இருப்பினும், காஸாவைச் சேர்ந்த பலரின் மரணங்கள் படுகொலைக்குச் சமம் என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.