தைப்பே: ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் முதன்முறையாக ஒரு சீன ராணுவக் குழுவின் படகு காணப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, தைவானின் கிழக்குக் கடற்கரையில் சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் நிலைத்தன்மையை அதிகம் குலைப்பதாகவும் பதற்றங்களை மேலும் மோசமாக்குவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
தைவானைத் தனது சொந்தப் பிரதேசமாகக் கருதும் சீனா, ஜூன் மாதம் முதல் வழக்கமான கடலோரக் காவல் சுற்றுக்காவல் பணிகளுடன் அத்தீவின் கிழக்குக் கடற்கரையில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவின் இறையாண்மைக் கோரிக்கைகளை நிராகரிக்கும் தைவானின் அதிகாரிகள், ராணுவ, துணை ராணுவ, பொதுமக்களின் ஒருங்கிணைந்த வளங்களைப் பயன்படுத்தி, சாத்தியமான ஒரு கடல்சார் முற்றுகைக்காக சீனா ஒத்திகை பார்ப்பதாகத் தாங்கள் நம்புவதாகக் கூறுகின்றனர்.
தடை அல்லது மோதல் ஏற்படும் சூழலில், நட்பு நாடுகளிலிருந்து போர்க்கால விநியோகப் பாதைகளுக்குத் தனது கிழக்குக் கடற்கரைப் பகுதி மிக முக்கியமானது என்று தைவான் கருதுகிறது.
அந்த ராணுவக் குழுவின் படகு தென்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், தைவானுக்குக் கிழக்கே சீனாவின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது என்று கூறினார்.
“சீனாவின் நடவடிக்கைகள் நிலைத்தன்மையை வெகுவாகக் குலைப்பவையாக உள்ளன,” என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
“எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தைவான் அமைதியான முறையில் நிர்வகித்து வரும் கடல்சார் பகுதிகளில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயல்வதன் மூலம், சீனா பதற்றத்தை அதிகரிப்பதுடன், பிரச்சினைகளுக்கு அமைதியாகத் தீர்வுகாணும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது,” என்றும் அவர் கூறினார்.
