சீனாவின் உற்பத்தி தொடர்ந்து சரிவு

2 mins read
4a0df242-1dc5-4345-aebe-b0eee75e6625
சீனாவின் ஜியாங்சு மாநிலம், நன்டோங்கில் உள்ள துணியாலையில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்காவுடன் வணிக உடன்பாடு எட்டப்பட்டபோதும் சீனாவின் உற்பத்தி கடந்த நவம்பர் மாதம் சுருங்கியதாக அதிகாரத்துவ மற்றும் தனியார்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதிக்கான பணிப்புகள் (orders) குவிந்தாலும் ‘ரேட்டிங்டாக்’ சீன உற்பத்திக் குறியீடு 49.9க்குக் குறைந்தது என்று திங்கட்கிழமை (டிசம்பர் 1) வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

வளர்ச்சியையும் சரிவையும் பிரித்துக்காட்டும் அக்குறியீடு 50க்கும் கீழே இறங்கியது கடந்த நான்கு மாதங்களில் இதுவே முதன்முறை.

முன்னதாக, உற்பத்திக் குறியீடு சற்று மேலேறியுள்ளபோதும் அது தொடர்ந்து எட்டாவது மாதமாகச் சரிவுகண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.

இதனிடையே, 2022 இறுதிக் காலாண்டிற்குப் பிறகு சீனப் பொருளியல் ஆக மெதுவாக வளர்ச்சி கண்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் முதன்முறையாகக் கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சியும் சுருங்கியது.

“நவம்பர் மாதத்தில் ஏற்றுமதிக்கான பணிப்புகள் குவிந்தபோதும் அவற்றால் உற்பத்தித் துறையின் மந்தமான வளர்ச்சியை மாற்றியமைக்க இயலவில்லை,” என்று ரேட்டிங்டாக் நிறுவனர் யாவ் யு குறிப்பிட்டார்.

மேலும், ஐந்து விழுக்காடு என்ற ஆண்டு வளர்ச்சி இலக்கை எட்ட வேண்டுமெனில், தேவை, வழங்கல் தொடர்பில் வலுவான முயற்சிகளைக் கைக்கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து சீன அரசாங்கம் ஒரு டிரில்லியன் யுவானை (S$183 பில்லியன்) கூடுதலாக முதலீடு செய்துள்ளதால் இவ்வாண்டு ஐந்து விழுக்காடு வளர்ச்சி கிட்டத்தட்ட சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வணிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளபோதும் அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதி போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பில் இன்னும் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இது, அந்த உடன்பாட்டின் வலுவற்ற தன்மையைக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அண்மை வாரங்களாக ஜப்பானுடன் ஏற்பட்டுள்ள அரசதந்தர அடிப்படையிலான மோதலும் சீனப் பொருளியல்மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், உள்ளூரிலும் தேவை குறைந்திருப்பது சீனத் தொழிற்சாலைகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து ஐந்தாவது மாதமாகக் கடந்த அக்டோபரிலும் சில்லறை விற்பனை வளர்ச்சியும் மந்தமடைந்தது.

குறிப்புச் சொற்கள்