மும்பை: ஷாங்காய் விமான நிலையத்தில் இடைவழி மாற்று (transit) விமானத்துக்காக அங்கு தரையிறங்கிய இந்தியக் குடிமகளான ஒரு பெண்ணைத் தன்னிச்சையாகத் தடுத்துவைத்த அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து கடுமையான எதிர்ப்பை சீனாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் அந்த மாது, இந்தியக் கடப்பிதழை வைத்திருந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன. அவர் சீன அதிகாரிகளால் ஷாங்காய் நகரில் நவம்பர் 21ஆம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அவர் பிறந்துள்ளதால் அவர் வைத்திருந்த கடப்பிதழ் செல்லுபடியாகாது என்று சீன அதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளனர்.
‘சங்னான்’ என்று சீனா அழைக்கும் அருணாசலப் பிரதேசத்தை அந்நாட்டின் ஒரு பகுதி என்று அது உரிமை கொண்டாடுகிறது. அதனை இந்தியா தொடர்ந்து மறுத்துவருகிறது.
பிரேமா வங்ஜொம் தொங்டொக் என்ற அந்தப் பெண், மாற்று விமானத்தில் ஏறி ஜப்பான் செல்வதை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்தனர் என்று கூறினார்.
“அனைத்துலக விமானப் பயண விதிமுறைகளுக்கு எதிரான அவர்களது செயல்பாட்டை சீன அதிகாரிகள் இன்றுவரை முறையாக விளக்கவில்லை,” என்று இந்திய வெளியுறவுத் துறையின் பேச்சாளர் ரன்டிர் ஜெய்வால் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அனைத்து சோதனைகளும் சட்டப்படியும் விதிமுறைகளுக்கு ஏற்ற வகையிலும் மேற்கொள்ளப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

