பெய்ஜிங்: ஏற்றுமதி கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் சீனாவின் வணிக உபரி எதிர்பார்ப்பைவிட பெருமளவில் உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் சாதனை உபரியை சீனா முறியடிக்கும் பாதையில் செல்வதுடன், முக்கிய பங்காளிகளுடனான வணிக மோதல்களைத் தீவிரப்படுத்தக்கூடும்.
பகுதிமின்கடத்தி, பசுமைத் தொழில்நுட்பப் பொருள்களுக்கான அனைத்துலகத் தேவை உற்பத்தியைச் சீராக வைத்துள்ளதாக புதன்கிழமை (அக்டோபர் 14) வெளியிடப்பட்ட அந்நாட்டுச் சுங்கத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி 36.3 விழுக்காடும், இறக்குமதி 31.0 விழுக்காடும் உயர்ந்துள்ளன.
செப்டம்பர் மாத வணிக உபரி 133.53 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது. இதில் அமெரிக்காவுடனான உபரி 34.01 பில்லியன் டாலராகவும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உபரி 34.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வணிக உபரி 938.11 பில்லியன் டாலரை எட்டியுள்ளதால், விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ல் மொத்த உபரி 1.189 டிரில்லியன் டாலராகப் பதிவானது.
சவால்கள் இருந்தாலும் நான்காம் காலாண்டிலும் வணிக வளர்ச்சி தொடரும் என சீன சுங்கத்துறை துணை அமைச்சர் வாங் ஜுன் தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்பப் பொருள்களும் கார்களும் ஏற்றுமதியை அதிகரிக்கச்செய்துள்ளன. முதல் ஒன்பது மாதங்களில் பகுதிமின்கடத்தி ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 108.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீன கலப்பு வாகனங்களின் ஏற்றுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும், டிசம்பரில் கட்டுப்பாடுகள் அமலாவதற்குள் ஏற்றுமதியை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்யக்கூடும்.
செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இடையேயான உச்சநிலைமாநாட்டில், பரஸ்பரம் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்கள் மீதான வரிகளைக் குறைக்கவும் வரி நிறுத்தத்தை நீட்டிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
