கோலாலம்பூர்: சிறப்பு வேதிப்பொருள்கள், செம்பனை சார்ந்த பொருள்கள் உள்ளிட்டவற்றை மலேசியாவிலிருந்து வாங்குவதற்கான வாய்ப்புகளை கிங்ஃபா, பிளாஸ்டெக் சீனா, எட்டர்னல் ஆசியா ஆகிய நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
வெளிநாட்டு முதலீடுகள், உலகளாவிய பெருநிறுவனங்களுக்கு விநியோகம் செய்பவர்களாக மலேசிய நிறுவனங்கள் மாறுவதற்குப் பெரும் வாய்ப்புகளைத் திறந்துவிடுவதாக மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சஃப்ருல் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் இணைந்து, ஷென்சென் நகரில் நடைபெற்ற மலேசியா - சீனா உயர்நிலை வர்த்தக, முதலீட்டுக் கலந்துரையாடலில் பங்கேற்ற பிறகு, தமது சமூக ஊடகப் பதிவில் அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
டென்சென்ட், சியோமி, ஈவ் எனர்ஜி உட்பட 23 முன்னணிச் சீன நிறுவனங்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றன.
2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மலேசியாவில் சீனா 38.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைப் பதிவு செய்துள்ளதாகத் சஃப்ருல் கூறினார்.
“மலேசியாவின் எத்தனை சிறிய, நடுத்தர நிறுவனங்களும், விநியோகிப்பாளர்களும் அனைத்துலக விநியோகத் தொடர்களில் வெற்றிகரமாக இணைந்துள்ளனர் என்பதை வைத்தே இப்பொருளியல் உறவுகளின் வெற்றி அளவிடப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
