சீனத் தூதரின் ‘மிரட்டல்’: நேரில் அழைத்து பிலிப்பீன்ஸ் கண்டனம்

சீனத் தூதரின் ‘மிரட்டல்’: நேரில் அழைத்து பிலிப்பீன்ஸ் கண்டனம்

படம்: எக்ஸ்/CHINAEMBMANILA

19 Oct 2026 - 7:02 pm

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு சீனத் தூதரைத் திங்கட்கிழமை (அக்டோபர் 19) நேரில் அழைத்துத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் சீனா எளிதாக வெற்றி பெறும் எனத் தூதர் ஜிங் குவான் அண்மையில் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்குப் பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சீனத் தூதர் வெளியிட்ட அறிக்கை மிரட்டலாக உள்ளது என்றும் அவரது கருத்துகள் ஆத்திரமூட்டும் வகையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளன என்றும் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா தெரசா லாசாரோ கூறினார்.

அனைத்துலகத் தீர்ப்பையும் மீறி தென்சீனக் கடல் பகுதியைச் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே அண்மைக் காலமாகத் தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தச் சூழலில் பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பர்ட்டோ தியோடோரோ, சீனாவை வட்டாரத்தின் ‘பிரச்சினைக்குரிய நாடு’ என விமர்சித்தார்.

அதற்குப் பதிலடி தரும் வகையில் சீனத் தூதர் ஜிங் குவான் பேசியது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாபிலிப்பீன்ஸ்மிரட்டல்