கோலாலம்பூர்: கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் 3வது மாடியிலிருந்து விழுந்த சீன நாட்டவர் ஒருவர் மரணமடைந்தார்.
வெள்ளிக்கிழமை (மே 1) பிற்பகல் 2.20 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்தது என்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை தலைவர் எம். ரவி அறிக்கையில் தெரிவித்தார்.
“பால்கனி பகுதியில் 27 வயது பெண் ஒருவர் உட்கார்ந்து அழுதுக் கத்திக் கொண்டிருந்தார். அவரைச் சமாதானப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சி செய்தனர். கோலாலம்பூர் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளும் அவரை மீட்க நெருங்கினர். ஆனால், முரண்டுபிடித்த அந்தப் பெண் சரக்குப் பகுதிக்குள் குதித்துவிட்டார்,” என்று உதவி ஆணையருமான திரு ரவி கூறினார்.
அவசர மருத்துவக் குழு, அந்தப் பெண்ணுக்கு முதலுதவிகளைச் செய்தது. பின்னர் சிகிச்சைக்காக அவர் புத்ராஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், மாலை 5.09 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
மே 2ஆம் தேதி சீனாவுக்கு அவர் திரும்பிச் செல்லவிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று திரு ரவி மேலும் தெரிவித்தார்.

