போதை விருந்தின் ஏற்பாட்டாளராக சீன நாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

போதை விருந்தின் ஏற்பாட்டாளராக சீன நாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

1 mins read
ca5009ec-8c59-43cb-847d-377154aaacc8
அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்ட 51 பேரில் 17 பேர் மீதும், போதைவிருந்தின் ஏற்பாட்டாளர் என்று கூறப்படும் சீன நாட்டவர் மீதும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர்தான் போதை விருந்து ஏற்பாட்டாளர் என்று மலேசியக் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்ஸ்டகிராம் வழியாக இந்தப் போதைவிருந்து தொடர்பான விவரம் பரப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்துவதற்காக அன்றி, அங்கு வந்திருந்தவர்களின் சொந்த பயன்பாட்டுக்காகப் பகிர்ந்து கொள்ளப்பட்டவை என்று அதிகாரிகள் கூறினர்.

எனினும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கூடுதல் புலனாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சோதனையின்போது மயக்க நிலையில் மீட்கப்பட்டு, கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நபர் ஒருவரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருப்பதாக திரு உசேன் குறிப்பிட்டார்.

அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்ட 51 பேரில் 17 பேர் மீதும், போதைவிருந்தின் ஏற்பாட்டாளர் என்று கூறப்படும் சீன நாட்டவர் மீதும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 24ஆம் தேதியன்று ஹோட்டலில் நடைபெற்ற அதிரடிச் சோதனைகளில், 103,070 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபோதைப்பொருள்கைது