கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு காலத்தை ஒட்டி கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு நான்கு நாள் தடை விதித்துள்ளது மலேசிய போக்குவரத்து அமைச்சு.
அத்துடன், வாகனங்களுக்கான வேக வரம்பையும் தற்காலிகமாக அது குறைத்துள்ளது.
கனரக வாகனங்களை ஓட்டும் தடை புத்தாண்டுக்கு முந்தைய ஜனவரி 27, 28 தேதிகளிலும் புத்தாண்டுக்குப் பின்னர் வரும் பிப்ரவரி 1, 2ஆம் தேதிகளிலும் நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கூறும் மலேசிய போக்குவரத்து அமைச்சு, இந்த நடவடிக்கைகள், சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்க உதவும். அத்துடன், போக்குவரத்து உச்சநேரங்களில் தனியார் வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவை சாலைகளில் ஒருசேரச் செல்வதால் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயத்தையும் தடுக்கும் என்று அமைச்சு கூறியது.
“இதை உறுதிப்படுத்த, சாலைப் போக்குவரத்துத் துறை மற்ற அமலாக்க முகவைகளுடன் இணைந்து 2025ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு காலத்தில் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்,” என்று அமைச்சு கூறியது.
இதேபோல், வாகனங்களுக்கான தற்காலிக வேக வரம்பும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 தேதிவரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.