ஜோகூர்: சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூர்வாசிகள் பலர் ஜோகூர் பாரு சென்று பொருள்களை அதிக அளவில் வாங்குவார்கள்.
இந்தக் காலகட்டத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜோகூர் பாரு வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களின் வருகையைச் சமாளிக்கும் விதமாகத் தயார்நிலையில் உள்ளனர். அண்மை வாரங்களாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் இனிவரும் நாள்களில் விற்பனை எண்ணிக்கை கூடும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
“இரண்டு வாரங்களாக வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் வாடிக்கையாளர்கள் என்னை அணுகி வருகின்றனர்,” என்று பரிசுப்பொருள்களை விற்கும் கடையை நடத்தும் லூ சோக் தெரிவித்தார்.
“இதுவரை கிட்டத்தட்ட 300 பரிசுப் பொட்டலங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளேன். சீனப் புத்தாண்டுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் அதிக அளவில் வர்த்தகம் நடக்கும்,” என்று அவர் கூறினார்.
பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டு விழாக் காலத்தில் சராசரியாக 10,000 பரிசுப் பொட்டலங்கள் வியாபாரம் செய்யப்படும் என்றும் இவ்வாண்டும் அதே எண்ணிக்கையைத் தொடும்,” என்று லூ நம்பிக்கை தெரிவித்தார்.
லூவைப்போலச் செடிகள் விற்பனை நிலையம் வைத்துள்ள இங் கோக் இயோவும் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து விற்பனை களைகட்டியுள்ளதாகச் சொன்னார்.
“சிங்கப்பூர் வாடிக்கையாளர் எப்போதும் இல்லாததுபோல் இப்போது முன்கூட்டியே செடிகளை வாங்கத் தொடங்கிவிட்டனர். நாங்களும் விநியோகிக்கத் தொடங்கிவிட்டோம்,” என்றார் இங்.
மூங்கில், ஆர்கிட், செர்ரி பிளாசம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி வாங்குவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜோகூரில் விழாக் காலத்தையொட்டி ஹோட்டல்களின் முன்பதிவு ஜனவரி மாத இறுதியில் அதிகரிக்கும் என்று ஜோகூர் ஹோட்டல்ஸ் மலேசியச் சங்கத்தின் தலைவர் ஐவர் டியோ தெரிவித்தார்
“தற்போதைய நிலைமை எப்போதும் போல் தான் உள்ளது. அவ்வளவு அதிகமாக முன்பதிவுகள் இடம்பெறவில்லை. இன்னும் சில நாள்களில் நிலைமை மாறலாம்,” என்றார் அவர்.
இவ்வாண்டு, சீனப் புத்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கும்.

