வடகொரியாவுக்குச் சீன அதிபர் பயணம் மேற்கொள்ளக்கூடும்

வடகொரியாவுக்குச் சீன அதிபர் பயணம் மேற்கொள்ளக்கூடும்

படம்: ஏஎஃப்பி

04 Jun 2026 - 6:36 pm

1 mins read

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங் விரைவில் வடகொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கேற்ப வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

வான்டோர் என்ற செயற்கைக்கோள் நிறுவனம் மே 30ஆம் தேதியன்று எடுத்த படங்களில், பியோங்யாங்கின் மையப்பகுதியில் உள்ள ‘கிம் இல் சுங்’ சதுக்கத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு புதிய கட்டுமானம் ஒன்று கட்டப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பதற்காகப் பயன்படுத்தப்படும் இந்தச் சதுக்கத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இத்தகைய கட்டுமானப் பணிகள் எதுவும் காணப்படவில்லை.

ராணுவ அணிவகுப்புகள் மற்றும் முக்கியப் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்தச் சதுக்கத்தின் குறிப்பிட்ட பகுதி, கடந்த 202ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும், அண்மையில் 2026ஆம் ஆண்டில் பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவையும் வரவேற்கப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஸி ஜின்பிங் ஜூன் மாதத் தொடக்கத்தில் வடகொரியாவுக்கு வரக்கூடும் என்று தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம், அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் உண்மையானால், கடந்த ஆறு ஆண்டுகளில் அதிபர் ஸி வடகொரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் 2026ஆம் ஆண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாகவும் இது அமையும். எனினும், வடகொரியாவோ அல்லது சீனாவோ இந்தப் பயணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
ஸி ஜின்பிங்வடகொரியாபயணம்