இந்திய இளையர்கள் தாதிமைத் துறையைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்து

இந்திய இளையர்கள் தாதிமைத் துறையைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்து

1 mins read
அது விவேகமான செயல் என்கிறார் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்
6d0c3456-8940-4e6d-a138-9ab393fc6acd
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் - படம்: பெர்னாமா

ஈப்போ: மலேசியாவில் நாடு தழுவிய அளவில் அரசாங்கத்தில் 80,000 தாதியரும் தனியார் துறையில் 50,000 தாதியரும் பணிபுரிந்து வந்தாலும் இன்னமும் பல முக்கிய மருத்துவமனைகளில் தாதியர்க்கான பற்றாக்குறை இருந்து கொண்டுதான் உள்ளது.

அரசாங்கம் அல்லது பொதுச் சேவைத்துறையில் பணியாற்ற விரும்பும் இந்திய இளையர்கள் ஆசிரியர் தொழிலுக்கு அடுத்த படியாகத் தாதிமைத் துறையைத் தேர்ந்தெடுப்பது விவேகமானது என்கிறார் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன். 

“இதுவும் மிகச் சிறந்த துறை. இத்துறையில் ஈடுபடுவதன் வழி இந்திய இளையர்கள் தங்களின் வாழ்க்கையில் பல்வேறு ஏற்றங்களை அடையாளம் கண்டு முன்னேறலாம். இது ஒரு பணியாக மட்டுமன்றி சிறந்த சேவையாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே கூடுதலான இந்திய இளையர்கள் தயக்கமின்றி இத்துறையைத் தேர்வு செய்யலாம்,” என்றார் அவர்.

அதேவேளையில், நாட்டின் நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருவதால், அந்த இடத்தைப் பூர்த்தி செய்வதற்கும் அதிகமான மருத்துவர்கள் அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், ஊதிய விகிதத்தை முன்னிறுத்தி அதிகமான நிபுணத்துவ மருத்துவர்கள், அரசாங்கத்தில் இணைவதற்குத் தயக்கம் காட்டுவதாகத் திரு சிவநேசன் கவலை தெரிவித்தார்.

மலேசியத் தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) இரவு ஈப்போவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற அச்சங்கத்தின் 76வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடு தழுவிய அளவிலிருந்து சுமார் 1,200க்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் தாதியர் இக்கூட்டத்தில் கலந்துச் சிறப்பித்ததாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்