வாஷிங்டன்: கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, மூன்று பயங்கரவாதச் சந்தேக நபர்களை மட்டுமே ‘வாட்டர்போர்டிங்’ எனப்படும் நீர்ச் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக அமெரிக்க மத்திய உளவு அமைப்பான ‘சிஐஏ’ (CIA) அதிகாரபூர்வமாகக் கூறியிருந்தது.
ஆனால், அதைவிட அதிகமான கைதிகளிடம் அந்தச் சித்திரவதை முறை பயன்படுத்தப்பட்டதாக ‘சிஐஏ’யின் முன்னாள் ஒப்பந்ததாரர் ஒருவரின் ரகசிய அறிக்கை தற்போது தெரிவிக்கிறது.
‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தித்தாள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தொடுத்த வழக்கால் அரசாங்கம் வெளியிட்ட ஆவணங்களில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. ‘சிஐஏ’ உண்மையை மறைத்து, அதிக அளவில் அந்தச் சித்திரவதை முறையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற நீண்டகாலச் சந்தேகத்தை அது உறுதிப்படுத்துகிறது.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில், வெளிநாடுகளில் உள்ள ரகசியச் சிறைகளில் பயங்கரவாதச் சந்தேக நபர்களை அடைத்து வைத்து ‘சிஐஏ’ பல்வேறு சித்திரவதை முறைகளை மேற்கொண்டது. அந்தச் சர்ச்சைக்குரிய வரலாற்றில் இந்தப் புதிய தகவல் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
அந்தச் சாட்சி, ‘சிஐஏ’ அமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். ‘பிளாக் சைட்ஸ்’ (Black sites) என அழைக்கப்பட்ட அந்த ரகசியச் சிறைகளில் ஒன்றில் அவர் வேலை செய்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்கே அமைந்திருந்த அந்தச் சிறை, சில வேளைகளில் ‘சால்ட் பிட்’ (Salt Pit) அல்லது ‘டிடென்ஷன் சைட் கோபால்ட்’ (Detention Site Cobalt) என்று அழைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில், அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அதிகாரி ஒருவரிடம் பேசிய அந்த மொழிபெயர்ப்பாளர், பஹீர் எனத் தாம் குறிப்பிட்ட நபர் ஒருவர், தண்ணீருக்குள் தலைகீழாகச் சாய்க்கப்பட்ட பலகையில் கட்டி வைக்கப்பட்டிருந்ததைத் தாம் நேரில் பார்த்ததாகத் தெரிவித்தார்.
‘சிஐஏ’ அமைப்பு சித்திரவதை முறைகளைப் பயன்படுத்தியது குறித்தும், 2008 முதல் 2012 வரை நீர்ச் சித்திரவதைக் காட்சிகள் அடங்கிய காணொளிகளை அழித்தது குறித்தும் சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் நடத்திய விசாரணையில் அந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
