கொவிட்-19: ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பரவிவரும் ‘சிக்காடா’

கொவிட்-19: ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பரவிவரும் ‘சிக்காடா’

2 mins read
a712d1a5-b5fe-4798-b4df-bab8da2c94cc
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏறக்குறைய 10,247 பேரிடம் புதிய வகை கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவிவரும் புதிய வகை கொவிட்-19 கிருமி ஆஸ்திரேலியாவிலும் தலைதூக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எனினும், புதிதாகக் கண்டறியப்பட்ட ‘சிக்காடா’ (Cicada) என்று அழைக்கப்படும் பிஏ.3.2 (BA.3.2) கிருமிவகை இதற்குமுன் கண்டறியப்பட்ட கிருமிவகையுடன் ஒப்புநோக்க கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகளுக்குமுன் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட ‘சிக்காடா’ கிருமிவகை ஒருசில ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் பரவிவருகிறது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆக அதிகமானோர் ‘சிக்காடா’ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 10,247 பேரிடம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதையடுத்து குவீன்ஸ்லாந்தில் 6,378 பேரும் விக்டோரியாவில் 3,635 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆஸ்திரேலியாவில் 1,932 பேரிடம் ‘சிக்காடா’ கண்டறியப்பட்டது.

அண்மை வாரங்களில் ‘சிக்காடா’ அதிகமானோரைப் பாதித்திருந்தபோதும் உலகச் சுகாதார நிறுவனப் பேராசிரியர் பேட்ரிக் ரீடிங் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்றார்.

“புதிய வகைக் கிருமி கடுமையானது என்பதற்கோ, மரணம் விளைவிக்கக்கூடியது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை,” என்று பேராசிரியர் பேட்ரிக் கூறினார்.

எனினும், இதற்குமுன் இருந்த கிருமிவகையைக் கட்டுப்படுத்தியதுபோலத் தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் ‘சிக்காடா’ கிருமியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று பேராசிரியர் பேட்ரிக் சொன்னார்.

ஆனாலும், நாள்பட்ட நோயுடையோரும் மூத்தோரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்.

முகக்கவசங்கள் அணிவது, வீட்டிலிருந்தவாறு பரிசோதனைகளைச் செய்துகொள்வது, உடல்நலம் சரியில்லாவிட்டால் வீட்டில் தங்கியிருப்பது, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது போன்றவை மூலம் ‘சிக்காடா’ பரவலைத் தடுக்க முடியும் என்று பேராசிரியர் பேட்ரிக் சுட்டினார்.

உலக அளவில், ஒமிக்ரான் கிருமி ஐந்து வகை கிருமிகளாக உருமாறியுள்ளது.

உலகச் சுகாதார நிறுவனம் கண்காணித்துவரும் அந்த ஐந்து வகைக் கிருமியில் ‘சிக்காடா’வும் ஒன்று.

குறிப்புச் சொற்கள்