அதிகமான வெளிநாட்டினர்க்குக் குடியுரிமை: மலேசிய உள்துறை அமைச்சர் மறுப்பு

அதிகமான வெளிநாட்டினர்க்குக் குடியுரிமை: மலேசிய உள்துறை அமைச்சர் மறுப்பு

2 mins read
f80b77f8-df01-434a-b19c-b70a8ad0235b
மக்களைக் குழப்புவதற்கும், இனப் பதற்றத்தையும் வெறுப்புணர்வையும் தூண்டுவதற்கும் சிலர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பி வருவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் சாடினார். - படம்: ஃபிரீ மலேசியா டுடே
Google News Preferred Icon

புத்ராஜெயா: மலேசிய உள்துறை அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு ஒட்டுமொத்தமாகக் குடியுரிமை வழங்கியதாகவும் 1.2 மில்லியன் சீன நாட்டவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளைப் பலமுறை மறுத்துள்ளேன். உண்மையான தரவுகள், அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் விரிவான விளக்கங்களும் அளித்துள்ளேன்.

“இருப்பினும், மக்களைக் குழப்புவதற்கும், இனப் பதற்றத்தையும் வெறுப்புணர்வையும் தூண்டுவதற்கும் ஏற்கெனவே திருத்தப்பட்ட காணொளிகளையும், சுவரொட்டிகளையும், வதந்திகளையும் சில தரப்பினர் தொடர்ந்து வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்,” என்று அவர் சமூக ஊடகப் பதிவு வழியாகத் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து ஏற்கெனவே அதிகாரபூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகத் திரு சைஃபுதீன் கூறினார். அறிக்கைகள், ஊடகச் செய்திகள் மூலமாக அதுதொடர்பான உண்மைகள் அனைத்தும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இத்தகைய அவதூறான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது தனிமனிதர்களின், பல்வேறு நிறுவனங்களின் நற்பெயரைக் கெடுப்பதோடு மட்டுமன்றி, அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்து, இன வெறுப்பைத் தூண்டும். பொது அமைதியைக் குலைத்து, நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பது மிகவும் கவலைக்குரியது,” என்றார் அவர்.

இத்தகைய வதந்திகளைப் பரப்புவதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அரசியல் லாபங்களுக்காகவோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

எந்தவொரு தகவலையும் நம்புவதற்கு அல்லது பிறருடன் பகிர்வதற்குமுன், அதிகாரத்துவ தரப்புகள் மூலமாக அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்