வாஷிங்டன்: ஒரு நகரையே அழிக்கும் ஆற்றல்கொண்ட விண்கல் (asteroid) ஒன்று 2032ஆம் ஆண்டில் உலகைத் தாக்க 3.1 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தகவல் வெளியிட்டது.
நவீன காலத்தில் ஒரு விண்கல், உலகைத் தாக்கக்கூடிய அபாயம் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2024 YR4 எனும் இந்த விண்கல்லை விண்வெளித் துறையினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
பொதுவாக விண்கற்கள் உலகைத் தாக்கக்கூடிய வாய்ப்பைக் கணிக்கும் விகிதம் அதிகரிக்கும்போது அச்சம் ஏற்படுவது வழக்கம்; அதேவேளை, விண்வெளி ஆய்வாளர்கள் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும்போது விண்கல் உலகைத் தாக்குவதற்கான வாய்ப்பு விகிதம் அதிகரித்து பின்னர் விரைவில் பூஜ்ஜியத்துக்குக் குறையும் சாத்தியம் அதிகம் என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2024 YR4 விண்கல்லை சிலி நாட்டில் உள்ள எல் சாஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி அடையாளம் கண்டது. அக்கல்லின் அகலம் 40லிருந்து 90 மீட்டர் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.