பெட்டாலிங் ஜெயா: ஏற்கெனவே கடன் வாங்கி அதைச் செலுத்தாத பொதுத்துறை ஊழியர்கள், குற்றக்கும்பலின் உதவியுடன் கிட்டத்தட்ட 700 மில்லியன் மலேசிய ரிங்கிட் கடன்வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்தக் கடன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிதித்துறை அமைப்புகள் அதிகாரிகள் சேவைக் கட்டணம், செலுத்தாக் கடன்களைத் தீர்ப்பதற்கான கட்டணங்கள் மூலம் லாபம் அடைந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
ஆணையம், கிள்ளான் பள்ளத்தாக்கில் ஜனவரி 13 அன்று 24 இடங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். 4,000 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களின் கும்பலின் தலைவனும் ஒருவன். விசாரணையில் உதவுவதற்காக வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) மேலும் நான்கு வங்கி அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆணையர் அஸாம் பாகி மலேசிய ஊடகங்களிடம் கூறினார்.
நிதி ஆலோசனை சேவைகளை வழங்குவதாகக் கூறி, அரசு ஊழியர்களுடன் தொடர்பை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள அரசாங்க அமைச்சுகள், துறைகளுக்கு கும்பல் சென்றுள்ளது.
நாட்டின் பல்வேறு நிதித்துறை அமைப்புகளைச் சேர்ந்த வங்கி அதிகாரிகளைக் கொண்ட அந்தக் கும்பலால் 4,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டதாக முன்பு தகவல் வெளியானது.
நிதித்துறையைச் சேர்ந்த குறைந்தது 16 பேர் விசாரணை செய்வதற்காக கண்காணிக்கப்படுவதாக அஸாம் கூறினார்.
மேலும் பலர் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்படுவர் என்று ஆணையம் உறுதியளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஒழிப்புப் பிரிவு, பேங்க் நெகாரா மலேசியா, பல நிதித்துறை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான அந்த நடவடிக்கை, நிதி ஆலோசனை நிறுவன இயக்குநர்கள், வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒப்புதல் பெறப்பட்ட ஒவ்வொரு கடனுக்கும் வங்கி அதிகாரிகள் 5,000 ரிங்கிட் பெற்றதாகவும், கடன் மதிப்பில் 1% லஞ்சத்துடன் அவர்கள் ஒப்புதல் பெற்றவுடன் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக 16.2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான 70 நிறுவனக் கணக்குகளையும் தனிப்பட்ட கணக்குகளையும் ஆணையம் முடக்கியுள்ளது.
ஒன்பது வாகனங்கள், 300,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கம், 11.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 17 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 430,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள ஐந்து விலைமதிப்பான கைப்பைகள் ஆகியவற்றையும் அது கைப்பற்றியுள்ளது.

