டாக்கா: பங்ளாதேஷில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கிடையே கைகலப்பு மூண்டதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
2024ஆம் ஆண்டில் அப்போதைய அதிபரான ஷேக் ஹசினாவின் ஆட்சியைக் கவிழ்க்க முக்கிய காரணங்களாக இருந்த அமைப்புகளுக்கிடையே கருத்து வேற்றுமைகள், மோதல்கள் ஏற்படுவதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பங்ளாதேஷின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குல்னா பொறியியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை பங்ளாதேஷ் தேசியவாத கட்சியில் சேர்க்க அக்கட்சியின் இளையரணி முயன்றபோது மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) நிகழ்ந்தது.
பங்ளாதேஷ் தேசியவாத கட்சியின் இளையரணிக்கும் ஸ்டுடண்ட்ஸ் அகேன்ஸ்ட் டிஸ்கிரிமினேஷன் (Students Against Discrimination) அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது.
காயமடைந்தவர்களில் குறைந்தது 50 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பங்ளாதேஷ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செங்கற்கள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
அரிவாள் போன்ற ஆயுதங்களை ஏந்தி இருதரப்பினரும் மோதிக்கொண்டது, காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது ஆகியவற்றை காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக காவல்துறை கூறியது.
பாதுகாப்புப் பணிகளுக்கான கூடுதல் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டது.