அன்றாடம் ஒரு வகுப்பறை அளவு மாணவர்கள் லெபனானில் மரணம்: ஐ.நா.

அன்றாடம் ஒரு வகுப்பறை அளவு மாணவர்கள் லெபனானில் மரணம்: ஐ.நா.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் லெபனானில் இதுவரை 111 சிறார்கள் கொல்லப்பட்டதோடு, 334 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்
படம்: ராய்ட்டர்ஸ்

18 Mar 2026 - 7:16 pm

2 mins read

பெய்ரூட்: ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா போராளிகள் மீது இரண்டு வாரங்களுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலின் விளைவாக அன்றாடம் ஒரு வகுப்பறை அளவிலான குழந்தைகள் காயமடைந்துள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை ஐக்கிய நாட்டு அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு (UNICEF) திங்கட்கிழமை (மார்ச் 17) நடந்த ஊடக நேர்காணலில் தெரிவித்துள்ளது.

ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கியதிலிருந்து போர் லெபனானுக்கும் விரிவடைந்துள்ளது. ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் லெபனானில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 350,000 சிறுவர்கள் என்று அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

“ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பறை அளவிலான குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர்,” என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட் சைபன் கூறினார்.

லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 111 சிறார்கள் கொல்லப்பட்டதோடு, 334 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அந்த எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளுக்கு 30 குழந்தைகள் கொல்லப்படுவதற்கு ஈடாகும்.

பிப்ரவரி 28ல் மத்திய கிழக்குப் போர் தொடங்கிய நிலையில் மார்ச் 2ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து லெபனானின் பகுதிகளை இஸ்ரேல் தீவிரமாகத் தாக்கிவருகிறது.

மத்திய கிழக்குப் போரில் மாண்டுள்ள குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 1,200ஐ எட்டியுள்ளது என்று அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு, தாங்கள் வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து தாக்குவதில்லை என்றும் தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பு பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் போதுமான கால அவகாசத்தை முன்கூட்டியே எச்சரிக்கைகள் மூலம் வழங்குவதாகவும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
லெபனான்போர்ஐநாநிதிஇஸ்ரேல்