வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி டெக்சஸில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் தமது மனைவி ஜேக்லினுடன் கூரையற்ற காரில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்த திரு கிளின்ட் ஹில், அவர்களைக் காப்பாற்ற அவர்கள் காரின் மேல் பாய்ந்தார்.
அதிபரைக் காப்பாற்ற அன்று தமது உயிரைப் பணயம் வைத்த திரு ஹில், இவ்வாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி காலமானார்.
அவருக்கு 93 வயது.
அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் மிகச் சிறப்பாகச் சேவையாற்றியவர் என்று அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவு திரு ஹில்லுக்குப் புகழாரம் சூட்டியது.
திரு ஹில், அதிபர் கென்னடி உட்பட ஐந்து அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்பு அதிகாரியாகச் செவ்வனே செயல்பட்டதாக அது தெரிவித்தது.
“நான் இன்னும் சீக்கிரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். மரணமடையும் வரை அந்த வருத்தம் எனக்கு இருக்கும்,” என்று அதிபர் கென்னடியைக் காப்பாற்ற முடியாததால் தமக்கு ஏற்பட்ட சோகத்தை சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் திரு ஹில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
தமது 43வது வயதில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திரு ஹில், பல நூல்கள் எழுதி வெளியிட்டார்.
அவற்றில் கென்னடி படுகொலை தொடர்பான நூலும் அடங்கும்.