வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நெருங்கிய சகாக்களில் ஒருவரான செர்ஜியோ கோர் என்பவரை இந்தியாவுக்கான அடுத்த தூதராக நியமிக்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி இரட்டிப்பாக்கப்பட்டு அது அடுத்த வாரம் நடப்புக்கு வர இருக்கும் வேளையில் திரு டிரம்ப் புதிய தூதரை அறிவித்துள்ளார்.
திரு கோர் தற்போது வெள்ளை மாளிகையில் அதிபர் அலுவலக இயக்குநராக உள்ளார்.
இந்தியாவுக்கான தூதராகப் பொறுப்பேற்கும் வேளையில் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் திரு கோர் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திரு டிரம்ப் தமது டுரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“செர்ஜியோ ஒரு சிறந்த நண்பர். அவர் பல ஆண்டு காலமாக எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நான் முழுமையாக நம்பக்கூடிய, எனது திட்டங்களை நிறைவேற்றக்கூடிய, நமக்கு உதவக்கூடிய ஒருவரை உலகின் மிகவும் பிரபலமான வட்டாரத்துக்கு நியமிக்க வேண்டியது அவசியமான ஒன்று,” என்று அவர் அதில் தெரிவித்து உள்ளார்.
இருப்பினும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக திரு செர்ஜியோ எப்போது பொறுப்பேற்பார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
“நான் உறுதி செய்யும் வரை திரு செஜியோ தமது தற்போதைய பொறுப்பில் தொடர்வார்,” என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு டிரம்ப்பின் வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் விரிவான வேளாண் மற்றும் பால்பண்ணைத் துறைகளுக்கு இந்தியா அனுமதி மறுத்து வருவது அதற்கு முக்கிய காரணம்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளியல் நாடான இந்தியா மீது திரு டிரம்ப் ஏற்கெனவே விதித்த 25 விழுக்காட்டு வரியுடன் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்குத் தண்டனையாக கூடுதலாக 25 விழுக்காட்டு வரியை விதித்தார்.
அந்த 50 விழுக்காட்டு வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடப்புக்கு வர உள்ளது.