அமெரிக்காவுடனான நெருங்கிய உறவு தற்காப்பை வலுப்படுத்துகிறது: தைவானிய அமைச்சர்

அமெரிக்காவுடனான நெருங்கிய உறவு தற்காப்பை வலுப்படுத்துகிறது: தைவானிய அமைச்சர்

2 mins read
ef614a46-bb26-42c2-9756-111be6712fba
தைவானியத் தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: அமெரிக்கப் பசிபிக் தளபத்தியத்துடனான நெருங்கிய உறவு தைவானின் தற்காப்பு ஆயத்தநிலையை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தைவானிய தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார்.

தைவானியத் தலைநகர் தைப்பே நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது இக்கருத்தைத் தெரிவித்தார். தைவானியப் படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும், குறிப்பாக அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபத்தியத்துக்கும் இடையே தீவிரமான ஈடுபாடுகளும் ராணுவப் பரிமாற்றங்களும் நடந்து வருவதாக அமைச்சர் கூ குறிப்பிட்டார்.

வட்டார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தைவானின் செயல்பாட்டுத் திறன், பயிற்சி, உத்திபூர்வ ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த இத்தொடர்புகள் உதவுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

சீனாவுடனான பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், தைவானின் ராணுவத் தயார்நிலையைப் பேணுவதற்கு அமெரிக்காவின் ஆதரவு, ராணுவப் பயிற்சி, தற்காப்புத் தொழில்நுட்பம், உத்திபூர்வ ஆலோசனைகள் ஆகியவை மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்று அமைச்சர் கூ சுட்டிக்காட்டினார்.

தைவானிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகாரத்துவத் தூதரக உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தைவான் உறவுகள் சட்டத்தின்கீழ் தைவானின் மிக முக்கியமான அனைத்துலக ஆதரவாளராகவும் போர்க்காலத்துக்குத் தேவையானவற்றை விநியோகிக்கும் நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்கி வருகிறது.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த கடலோரத் தற்காப்பு ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வது இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தைவானின் சுய ஆட்சியையும் ஜனநாயக வாழ்க்கைமுறையையும் பாதுகாப்பதற்குப் போர்த்திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்துவதோடு, அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் தைவான் மேலும் ஆழமாக்கும் என்று அமைச்சர் கூ சொன்னார்.

இதற்கிடையே, தைவானுக்கு எதிராக கடல்வழிப் பாதை முற்றுகையைச் சீனா நடைமுறைப்படுத்தினால் அது சீனாவுக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்றும் சீனாவின் பொருளியல் சவால்களை எதிர்கொள்ளும்போது அது மேலும் பல சிரமங்களை அதற்கு ஏற்படுத்திவிடும் என்றும் அமைச்சர் கூ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தைவான்அமெரிக்காதற்காப்பு