ஈரானில் பிரெஞ்சு மொழி நிலையம் மூடல், ஈரானியத் தூதருக்கு அழைப்பாணை

ஈரானில் பிரெஞ்சு மொழி நிலையம் மூடல், ஈரானியத் தூதருக்கு அழைப்பாணை

படம்: ஏஎஃப்பி

21 Sep 2026 - 4:19 pm

1 mins read

பாரிஸ்: ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின்கீழ் இயங்கிவந்த பிரெஞ்சு மொழி நிலையத்தை ஈரானிய அதிகாரிகள் மூடி, முத்திரை வைத்ததன் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்துள்ளது. பிரான்சிலுள்ள ஈரானியத் தூதருக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிரெஞ்சுத் தூதரக ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பண்பாட்டு நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சு கண்டித்துள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம், ஈரானில் பிரெஞ்சுக் குடிமக்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் போன்றவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி இயங்கியதாகவும் தேசியப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, ஈரான் அரசு வழக்கறிஞர் அலுவலக உத்தரவின் பேரில் பிரெஞ்சு மொழி நிலையம் மூடப்பட்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரின் சமூக ஊடகப் பதிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22), ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே இரு நாட்டு அமைச்சர்களும் சந்திக்கவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
பிரான்ஸ்ஈரான்மொழிதூதர்அழைப்பாணைமூடல்