தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீயால் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்; அனைத்துலக பயணங்கள் பாதிப்பு

3 mins read
952bd11f-e4a3-4d89-8b57-9974c3605254
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் மின்தடை ஏற்படக் காரணமாயிருந்த தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 70 பேர் போராடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

லண்டன்: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீயால் அந்த விமான நிலையம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நள்ளிரவு நேரம் வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ​ அந்தத் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீயால் விமான நிலையத்துக்கு மின்விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

“​எங்கள் பயணிகளின், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும்,” என்று விமான நிலையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அத்துடன், பயணிகள் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியது.  ​தீயணைப்புக் குழுக்கள் செயலில் இறங்கியுள்ளதாக தெரிவித்த விமான நிலையப் பேச்சாளர் ஒருவர், எப்பொழுது மின்விநியோகம் மீண்டும் தொடங்கும் என்பதில் தெளிவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில் தெரிவித்தார். அதனால், எதிர்வரும் நாள்களில் பயணத் திட்டங்களில் கணிசமான ​அளவு தடை ஏற்படுவதை  எதிர்பார்க்கலாம் என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். 

ஆரஞ்சு நிறத்தில் பெரிய அளவிலான தீப்பிழம்புகளும், புகையும் வானத்தை நோக்கி எழுவதைக் காண முடிந்தது. அருகிலுள்ள கட்டடங்களிலிருந்து ஏறக்குறைய 150 பேர் வெளியேற்றப்பட்டனர், ஆயிரக்கணக்கான சொத்துகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

​இதைத் தொடர்ந்து ஐரோப்பிய விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் யூரோகன்ட்ரோல் என்ற அமைப்பு, ஹீத்ரோ மின்விநியோகத் தடையால் விமான நிலைய​த்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தனது இணையப்பக்கத்தில் தெரிவித்தது. இந்நிலையில், ஹீத்ரோ விமான நிலையத்துக்கு செல்ல வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்படும் திட்டம் உள்ளதாகவும் அந்த இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ​இதற்கிடையே, ‘ஃபிளைட்ரேடார்24’ என்ற விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையப்பக்கம் குறைந்தது 120 விமானப் பயணங்கள் வழி மாற்றிவிடப்பட வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.  ​இதில், ஏற்கெனவே பல பயணங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக, குவாண்டாஸ் ஏர்வேஸ் பெர்த் நகரிலிருந்து வரும் தனது பயணம் பாரிசுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாகக் கூறியது. அதுபோல், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானப் பயணம் அயர்லாந்தில் உள்ள ஷனோன் நகருக்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாக ஃபிளைட்ரேடார்24’  விளக்கியது. 

பிரிட்டன் எரிசக்தி அமைச்சர் எட் மிலிபாண்ட், இந்தப் பெரிய தீ விபத்து மின்காப்பு அமைப்பு செயல்படுவதைத் தடுத்ததாகவும், பொறியாளர்கள் மூன்றாவது காப்புப் பொறிமுறையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். தீ விபத்துக்கு என்ன காரணம் என்று விரைவில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“ஒரு காப்பு ஜெனரேட்டர் இருந்தது, ஆனால் அதுவும் தீயினால் பாதிக்கப்பட்டது, இது எவ்வளவு அசாதாரணமானது மற்றும் முன்னோடியில்லாதது என்பதற்கான உணர்வைத் தருகிறது,” என்று அவர் ஸ்கை நியூசிடம் கூறினார். 

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ( சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை காலை 8 மணி,) மூடப்படும் என்று கூறியதை அடுத்து, சிங்கப்பூருக்கும் லண்டனுக்கும் இடையிலான குறைந்தது 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பி விடப்பட்டன.

11 விமானங்களில் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகளின் திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வெள்ளிக்கிழமை லண்டனில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்த SQ305, SQ317, SQ319, SQ321 ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது.

வெள்ளிக்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படவிருந்த SQ318 விமானமும் ரத்து செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிடம், மாற்று விமானங்கள் அல்லது தரைவழிப் போக்குவரத்தை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என்று எஸ்ஐஏ தெரிவித்தது.

பல விமானங்கள் லண்டனுக்கு அருகில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

சிங்கப்பூர் மற்றும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்