நோம் பென்: கம்போடியா, கடந்த ஓராண்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளை அடுத்து 700க்கும் மேற்பட்ட இணைய மோசடி நிலையங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மூத்த அரசாங்க அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 30,000 சந்தேக நபர்களும் பிடிபட்டனர்.
போலியான காதல் உறவுகள், மின்னிலக்க நாணய முதலீட்டுத் திட்டங்கள் போன்றவை மூலம் மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் பயன்படுத்தும் நடுவமாகக் கம்போடியா அண்மை ஆண்டுகளில் உருமாறியது.
விருப்பப்பட்டும் கடத்தப்பட்டும் மோசடி நிலையங்களில் வேலை செய்தோர், உலக அளவில் உள்ள இணையப் பயனீட்டாளர்களை ஏமாற்றினர்.
அமெரிக்கா, சீனா போன்ற பல்வேறு நாடுகள் தந்த நெருக்குதலை அடுத்து கம்போடிய அதிகாரிகள் மோசடித் துறையைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அதையடுத்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) கம்போடியா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு 700க்கும் அதிகமான மோசடி நிலையங்கள் அப்புறப்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்டது.
அத்துடன், வெளிநாட்டினர் 58,266 பேர் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
மோசடி நிலையங்கள் தொடர்பில் ஏறக்குறைய 30,000 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் உயர் நிலை அதிகாரிகள், சட்ட அமலாக்க அதிகாரிகள் 15 பேரும் அடங்குவர்.
சீனா, வியட்னாம், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து என 29 நாடுகளைச் சேர்ந்த 34,000க்கும் அதிகமான சந்தேக நபர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
“பெரிய அளவிலான மோசடி நிலையங்கள் கலைக்கப்பட்டன. எனினும், குற்றக் கும்பல்கள் சிறிய குழுக்களாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. கூட்டுரிமை வீடுகள், வாடகை வீடுகள், வாகனங்கள், காப்பிக் கடைகள் போன்றவற்றிலிருந்து அந்தக் கும்பல்கள் செயல்படுகின்றன,” என்று கம்போடிய அரசாங்கம் கூறியது.
இவ்வாண்டு ஜனவரியில் மோசடிக் கும்பலின் தலைவர் என்று நம்பப்படும் சென் சி என்ற ஆடவரைக் கம்போடியா நாடு கடத்தியது.
சீனாவில் பிறந்த அந்த ஆடவர், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் தலைவர் என்று அறியப்படுகிறார்.


