‘ஃபிளைதுபாய்’ (flydubai) விமானத்தில் கடந்த வாரம், விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்கும் முயற்சியாக அதன் தலைமை விமானியைக் (Captain) கத்தியால் குத்திய உதவி விமானி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக தனது விமானப் பயிற்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்ய நியூசிலாந்து சென்றிருந்தார்.
நியூசிலாந்து காவல்துறை அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த நபர் 2018 நவம்பர் முதல் 2019 மே மாதம் வரை ஆறு மாத காலம் மாணவர் விசா மூலம் நியூசிலாந்தில் இருந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
“குடிநுழைவுப் பதிவுகளின்படி, அவர் 2018 நவம்பர் 30ல் நியூசிலாந்து வந்தடைந்தார். பின்னர் 2019 மே 23ல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்,” என்று நியூசிலாந்து உதவி ஆணையர் மைக்கல் ஜான்சன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழி அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் கழித்த காலத்தைப் பற்றிய பதிவுகளை மறுஆய்வு செய்து அவர், அது குறித்த விசாரணைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
துபாயிலிருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்ட ‘ஃபிளைதுபாய்’ நிறுவனத்தின் ‘எஃப்இஸட்1073’ விமானத்தின் உதவி விமானி, அவசரக்காலக் கோடரியால் தலைமை விமானியைத் தாக்கியதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைமை அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவி விமானி ஓமான் நாட்டைச் சேர்ந்த ‘ஹமாம் அல்-ஹம்மாமி’ என்ற நபர் என இரு வெவ்வேறு ஆதாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய அதிகாரிகள் அந்த உதவி விமானியின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் ‘ஃபிளைடுபாய்’ நிறுவனமும் அந்த உதவி விமானியின் அடையாளத்தை இன்னும் பகிரங்கமாக வெளியிடவில்லை.
ஐக்கிய அரபுச் சிற்றரசில் காவல்துறையின் பிடியில் அகப்பட்டுள்ள அல்-ஹம்மாமியைத் தொடர்புகொண்டு அவரது கருத்துகளைப் பெற ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் தனிப்பட்ட முறையில் இயலவில்லை.
பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய ஆஸ்திரேலியப் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவும், அந்த நபருக்கு ஆஸ்திரேலியாவுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
