விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதிகள் வைக்கவேண்டும் என்ற ஆணித்தரமான கருத்தை முன்வைத்துள்ளார் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் வில்லி வால்ஷ்.
அண்மையில் 260 பேரைப் பலிவாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இடைக்கால அறிக்கையைப் பற்றி அவர் கருத்துரைத்தார்.
“குரல் பதிவுடன் காணொளி பதிவும் இருந்தால் விசாரணைகளில் அது பேருதவியாக இருக்கும்,” என்று சிங்கப்பூர் ஊடகங்களுக்குப் புதன்கிழமை (ஜூலை 16) அளித்த நேர்காணலின்போது திரு வால்ஷ் குறிப்பிட்டார்.
விமானி அறையில் காணொளியைப் பதிவுசெய்யும் நடைமுறையை விமானிகளுக்கான தொழிற்சங்கம் நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றது. விமானிகள் சங்கங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு, அத்தகைய காணொளிப் பதிவுகள் ரகசியமாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பியது.
இருப்பினும், ஏறக்குறைய 350 விமான நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் வால்ஷ், விமான விபத்துகளின் விசாரணை முழுமையாகவும் முறையாகவும் நடத்தப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
“தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் எங்கள் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்துள்ளது,” என்றார் அவர்.
அனைத்துலக நிபந்தனைகளுக்கு ஏற்ப அரசாங்கங்களும் விமான விபத்து அறிக்கைகளை நேரத்துக்கு வெளியிடும்படியும் திரு வால்ஷ் கேட்டுக்கொண்டார்.
“வெளியிடப்படும் அறிக்கைகள் மூலம் நாம் அனைவரும் பயனடைவோம். அவற்றை மதிப்பிட்டு விமானத் துறையில் உள்ள இதர நிறுவனங்கள் கற்றுக்கொள்ள முடியும்,” என்று திரு வால்ஷ் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஏர் இந்தியாவின் ஏஐ171 விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதியைப் பொருத்துவது குறித்த வாதம் மீண்டும் தலைதூக்கியது.
இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு, விபத்துக்குள்ளான போயிங் 787 வகை விமானத்தில் எரிபொருள் விசை முடக்கநிலைக்கு எப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பியது. விமானம் புறப்பட்டபின் ஒன்றன்பின் ஒன்றாக எரிபொருள் விசைகள் ஒருசில நொடிகளில் முடக்கநிலைக்கு மாறின. அது விமானத்தின் இயந்திரத்தை முடக்கியது.
இயந்திரங்களுக்குச் செல்லும் எரிபொருளை ஏன் நிறுத்தினார் என்று தலைமை விமானி கேட்க, துணை விமானி அதனை மறுத்தார். இந்த உரையாடல் விமானி அறையிலிருந்த குரல் பதிவுப் பெட்டியிலிருந்து பெறப்பட்டது.
எனினும், எப்படி அந்த விசை மாற்றப்பட்டது என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை.

