எரிபொருளாகிறது தைப்பூசத்தில் உடைக்கப்பட்ட 45 டன் தேங்காய்

எரிபொருளாகிறது தைப்பூசத்தில் உடைக்கப்பட்ட 45 டன் தேங்காய்

2 mins read
c885c23a-e7ab-44dc-ad99-fb7fd1ea7136
பினாங்கு தைப்பூசத்தில் கிட்டத்தட்ட 45 டன் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. - படம்: எம்ஐஆர்

ஜார்ஜ் டவுன்: பினாங்கில் தைப்பூசத் திருநாள் அன்று உடைக்கப்பட்ட கிட்டத்தட்ட 45 டன் எடைகொண்ட தேங்காய் அனைத்தும் எரிபொருளாக மாற்றப்படவிருக்கின்றன.

பினாங்கு தீவின் நகர மன்றப் பசுமைத் திட்டத்தின்கீழ் அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பத்து மாவுங்கில் கழிவு மாற்ற நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தேங்காய் அனைத்தும் எரிபொருளாக உருமாற்றப்படும் என்று மேயர் திரு ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

“தைப்பூசத்தில் உடைக்கப்பட்ட தேங்காய் வீணாகாது,” என்ற அவர், கழிவைக் குறைத்து நீடித்த எரிசக்தியை உருவாக்க நகர மன்றம் கொண்டுள்ள உறுதியை அந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

பினாங்கில் மூன்று நாள்கள் நீடித்த தைப்பூசக் கொண்டாட்டத்தின்போது ஏறக்குறைய 500 பினாங்கு தீவு நகர மன்ற ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் 18 வாகனங்களில் அதிகாலை 5 மணிக்கெல்லாம் தூய்மைப் பணிகளைத் தொடங்கினர்.

தைப்பூசக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாகப் பக்தர்கள் ஊர்வலப் பாதை நெடுக நேர்த்திக்கடனாகத் தேங்காயை உடைப்பது வழக்கம்.

வெள்ளி ரதமும், தங்க ரதமும் செல்லும் பாதைகளில் அடுக்கிவைக்கப்பட்ட தேங்காய்களைப் பக்தர்கள் உடைத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

அவ்வாறு உடைக்கப்படும் தேங்காய்களை உடனுக்குடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி ஊர்வலம் செல்வதற்குச் சாலையைத் தயார் செய்ய தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன என்று பினாங்கு தீவின் நகர மன்றச் சுற்றுப்புற சுகாதாரத் துணை அதிகாரி முகமது ‌‌‌ஷாஃபெசுல் ‌‌‌ஷாஃபி தெரிவித்தார்.

மூன்று வெவ்வேறு நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் லிட்டில் இந்தியா வட்டாரம் தொடங்கி ஜாலான் கெபுன் பூங்கா வரை நீடித்தது என்றார் அவர்.

ஊழியர்களின் உதவியும் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாவிட்டால் அத்தனை தேங்காய்களையும் அப்புறப்படுத்துவது பெருஞ்சவாலாக மாறியிருக்கும் என்றார் திரு ‌‌‌ஷாஃபி.

உடைக்கப்பட்ட தேங்காய்களைச் சாலைகளிலிருந்து விரைவாக அப்புறப்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
உடைக்கப்பட்ட தேங்காய்களைச் சாலைகளிலிருந்து விரைவாக அப்புறப்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. - படம்: லிவ், வெல்

தூய்மைப் பணிகளைப் பக்தர்கள் பலரும் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்