சட்டவிரோத ஆள் கடத்தலுக்கு ‘ரொட்டி சனாய்’, ‘டுரியான்’ மறைச்சொற்கள் பயன்பாடு

2 mins read
965ccd88-3c64-4a13-b72d-82f788b3234e
குற்றக் கும்பல் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள், மலேசியாவுக்குள் நுழைவதற்காக அவர்களின் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்டு) முத்திரையிட, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கும்பலின் பயன்பாட்டிற்கான பிரத்யேக முகப்புக்குச் செல்ல அறிவுறுத்தப்படும். - கோப்புப் படம்: ராய்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சோதனைகள் இன்றி நாட்டிற்குள் வெளிநாட்டினரை அழைத்துவர அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் மறைச்சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர்.

“ஸ்கூல்பாய்’, ‘சலாக்’, ‘லிமாவ்’, ‘லைச்சி’, ‘கர்பேட்’, ‘கிசாப்’, ‘ரொட்டி சனாய்’, ‘ஜுந்டா’, ‘ஆயம்’ போன்ற மறைச்சொற்கள் நாடுகளின் பெயர்களைக் குறிக்க குடிநுழைவு முகப்புகளில் பயன்படுத்தப்பட்டன,” என்று தகவல் ஒன்று குறிப்பிட்டது.

“லெம்பு”, “டுரியான்” போன்ற குறியீட்டு வார்த்தைகள் ஊழல் அதிகாரிகளுக்கு பணம் செலுத்துவதைக் குறிக்கின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

முனையம் 1, முனையம் 2 ஆகிய இரண்டிலும் பணிபுரியும் சந்தேகத்துக்குரியவர்கள், வெளிநாட்டினரின் குடியுரிமையின் அடிப்படையில் சோதனைகளின்றி அவர்களை உள்ளே விட 500 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட்டுக்கு (S$150 - S$745 க்கு இடையில்) பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“இரண்டு முனையங்களிலும் உள்ள அதிகாரிகள் குற்றக் கும்பல் மூலம் அழைத்து வரப்பட்டவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பெறுவார்கள்,” என்று தகவல்கள் தெரிவித்தன.

குற்றக் கும்பல் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்காக அவர்களின் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்டு) முத்திரையிட, கும்பலின் பயன்பாட்டிற்கான பிரத்யேக முகப்புக்குச் செல்ல அறிவுறுத்தப்படும்.

பின்னர் கும்பல், பணமாகவோ அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலமாகவோ ஓரிரு நாட்களில் அதிகாரிகளுக்கு பணம் செலுத்தும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் மேலும் பலர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆசம் பாக்கி கூறினார்.

எனினும், நாட்டிற்குள் நுழைவதற்கு குற்றக் கும்பலின் சேவைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டினரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று அவர் கூறினார்.

“நாட்டில் வேலை செய்யும் சட்டவிரோதக் குடியேறிகளின் அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி , கிள்ளான் பள்ளத்தாக்கு, கிளந்தான், பினாங்கில் நடந்த அதிரடிச் சோதனைகளில் நான்கு அமலாக்க முகமை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்