பொகொட்டா/குவிட்டோ: இக்குவடோருக்கான மின்சார விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கொலம்பியா வியாழக்கிழமை (ஜனவரி 22) அறிவித்துள்ளது.
அதோடு அந்நாட்டிலிருந்து பெறப்படும் 20 பொருள்களுக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்போவதாகவும் கொலம்பியா தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல், பொருளாதார முரண்பாடு ஆகிய பிரச்சினைகளால் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர் பூசல் தற்பொழுது பெருவடிவம் எடுத்துள்ளது. இக்குவடோரின் அதிபர் டேனியல் நொபோவா பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொலம்பிய இறக்குமதிகளுக்கு 30 விழுக்காடு ‘பாதுகாப்புக் கட்டணம்’ வசூலிக்கப்போவதாக புதன்கிழமை (ஜனவரி 21) அறிவித்தார். அதற்கு மறுநாள் இந்த நடவடிக்கையை கொலம்பியா பதிலுக்கு எடுத்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கொலம்பியா போதிய அளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அந்நாடு மறுத்துவருகிறது. அதன் தென் அமெரிக்க அண்டை நாடான இக்குவடோருக்கு மின்சாரத்தை அது விற்பனை செய்துவருகிறது.
இக்குவடோரின் அரசாங்கம் அதன் ‘பாதுகாப்புக் கட்டணங்கள்’ மின்சாரத்துக்கும் எண்ணெய் சார்ந்த தளவாடச் சேவைகளுக்கும் விதிக்கப்படாது என்பது குறித்து தெளிவுபடுத்தியும் கொலம்பியா அதன் பதில் நடவடிக்கைகளை குறிப்பாக மின்சார விற்பனைத் தடையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொலம்பியாவுடன் இணைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்க் குழாய் வழியாக இக்குவடோருக்கு எண்ணெய் விநியோகம் நடந்துவருகிறது. அதனைக் குறிவைத்து, அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இக்குவடோர் எரிசக்தி அமைச்சர் விவரங்கள் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகச் செயல்படும்படி இக்குவடோருக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

