'ஒடோனியல்' எனும் அழைக்கப்படும் டைரோ அத்தோனியோ உசுகா எனும் கொலம்பியாவின் ஆகப் பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர் நேற்று (அக்டோபர் 23ஆம் தேதி) கைது செய்யப்பட்டார்.
தரைப்படை, விமானத் துறை, காவல் துறை கூட்டாக செயல்பட்டு பனாமா நாட்டு எல்லையிலுள்ள ஆன்டியோகுயா மாகாணத்தில் அவர் பதுங்கி இருந்த இடத்தில் அவரைப் பிடித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான ஒடோனியலின் கீழ், சுமார் 1,200 ஆயுதம் ஏந்திய உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த 50 வயது நிரம்பிய ஒடோனியலை வலைவீசிப் பிடிக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒடோனியலை கொலம்பியாவின் ஆயுதமேந்திய படையினர் சூழ, கையில் விளங்கிட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் தருபவருக்கு எட்டு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுப்பதாக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
அமெரிக்காவோ இவர் தலைக்கு ஐந்து மில்லியன் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது.
ஒடோனியல் கைது செய்யப்பட்டது குறித்து கொலம்பியாவின் அதிபர் இவான் டுகேவே தொலைக்காட்சியில் ஒரு காணொளிச் செய்தியில் தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

