இந்து ஆலயங்கள் பற்றி சொன்னது தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்: மலேசியப் பிரதமர்

இந்து ஆலயங்கள் பற்றி சொன்னது தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்: மலேசியப் பிரதமர்

2 mins read
8cec9bf6-0e77-4c8c-bfac-afacbddfaf38
மலேசியாவில் அனுமதியின்றி எழுப்பப்பட்ட கோயில்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். - படம்: மலாய்மெயில்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள் குறித்து தாம் முன்வைத்த கருத்துகள் தவறாக இருந்தால் திருத்திக்கொள்ளத் தயார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மலேசியாவில் உள்ள இந்தியச் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதைப் போல தமது கருத்து கருதப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களிடம் திரு அன்வார் பேசினார்.

உரிய அனுமதி பெறாமல் எழுப்பப்பட்ட ஆலயங்கள்மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு அன்வார் இதற்குமுன் கூறினார்.

சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும் அத்தகைய புரிதல் பிரிவினையை விதைப்பதற்கான முயற்சி என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.

அனுமதி இன்றி எழுப்பப்பட்ட கோயில்களைத் திரு அன்வார் ‘சட்டவிரோத ஆலயங்கள்’ என்று குறிப்பிட்டது மலேசிய இந்தியச் சமூகத்திற்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த வார்த்தைக்காகத் திரு அன்வாரைப் பலரும் குறைகூறினர்.

அத்தகைய கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய திரு அன்வார், “பல மேற்கத்திய நாடுகளில் இன ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு பல வலசாரி கட்சிகள் வெல்கின்றன,” என்றார்.

மலேசியாவில் கண்டிப்பாக இருக்கும் அதேவேளை பிற சமயத்தினரையும் மதித்து நடக்கவேண்டும் என்றும் அடுத்தவர்களின் உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் அளவுக்கு கண்டிப்புடன் இருக்கக்கூடாது என்றும் திரு அன்வார் விளக்கம் அளித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அது மிகவும் சிரமம். தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட என் கருத்தை நான் மாற்றிக்கொள்ளத் தயார். ஆனால், ஒருபோதும் தவறான எண்ணத்துடன் அதை நான் சொல்லவில்லை,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

இந்து ஆலயங்கள் குறித்த விவகாரம் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஒன்று என்பதை அறிந்திருப்பதாகச் சொன்ன திரு அன்வார், பிரதமராகத் தாம் எதிர்கொண்ட ஆக இக்கட்டான பிரச்சினைகளில் அதுவும் ஒன்று என்றார்.

அடுத்தவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் என்று மலாய் இனத்தவருக்கும் அவ்வப்போது நினைவூட்டப்படவேண்டிய நிலையும் உள்ளதை அவர் சுட்டினார்.

எனினும், இளையத் தலைமுறைகள் இனப் பேதங்களைவிட்டு தூரமாகச் செல்வதைக் காணும்போது நம்பிக்கை பிறக்கிறது என்று திரு அன்வார் சொன்னார்.

மலாய் இனத்தவர் பெரும்பான்மையாக இருந்தாலும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களின் உரிமை உண்டு என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும்.

சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் பல தேவைகள் இருக்கலாம். ஆனால், மலேசியச் சமுதாயத்தைக் கீழறுக்கும் வகையில் இனம் சார்ந்த முடிவுகளை நாட்டால் எடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று திரு அன்வார் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
கோயில்சட்டவிரோதம்அமலாக்கம்நடவடிக்கைமலேசியா