பெட்டாலிங் ஜெயா: நடுவானில் விமானப் பயணிகளிடம் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர், பினாங்கில் இருந்து கோலாலம்பூர் சென்ற உள்நாட்டு விமானம் ஒன்றில் 5,500 ரிங்கிட் திருடியதற்காக சீன நாட்டவர் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டு மலேசியர்களிடம் இருந்து அவர்கள் அந்தப் பணத்தைத் திருடியதாக பாலிக் புலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
திருடர்கள் இருவருக்கும் மொத்தம் 5,700 ரிங்கிட் (S$1,730) அபராதம் விதிக்கப்பட்டது.
பினாங்கில் இருந்து கோலாலம்பூர் சென்ற மற்றொரு விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 3,000 ரிங்கிட் ரொக்கம் திருடியதாக ஆடவர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். விமானம் தரை இறங்கியதும் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
விமானங்களில் நடைபெறும் திருட்டுகளில் ஆக அண்மைய சம்பவங்கள் அவை.
இதற்கு முன்னர், மலேசியாவில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் 4,300 ஹாங்காங் டாலர் (S$746) திருடியதாக 49 வயது சீன நாட்டின் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு பயணிகளிடம் அவர் திருடியதாக அக்டோபர் 26ஆம் தேதி ‘த ஸ்டார்’ செய்தி வெளியிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பறக்கும் விமானங்களில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் பெரும்பாலானவை புகார் அளிக்கப்படாமல் மறைந்து விடுகின்றன.
காரணம், தங்களது பணம் பறிபோன விவரம் விமானத்தை விட்டு இறங்கிய பின்னரே பயணிகளுக்குத் தெரியவருகிறது.
ஹாங்காங்கிற்கு வரும் விமானங்களில் பயணிகளிடம் திருடும் சம்பவங்கள் இந்த ஆண்டு இரட்டிப்பாகி இருப்பதாக ஹாங்காங் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி டிசம்பர் 4ஆம் தேதி தெரிவித்து இருந்தார்.
2023ஆம் ஆண்டு பறக்கும் விமானங்களில் திருடப்பட்ட 92 சம்பவங்கள் தொடர்பில் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
இந்த ஆண்டு அது 169ஆக அதிகரித்துவிட்டதாக ஹாங்காங் அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நாடுகளின் ரொக்கப் பணம், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், கடன்பற்று அட்டைகள் போன்றவை விமானப் பயணிகளிடம் இருந்து திருடப்படுகின்றன.
இந்த ஆண்டு ஹாங்காங் வந்த விமானங்களில் 4.32 மில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்புள்ள பொருள்களும் பணமும் திருடப்பட்டன.
பெரும்பாலும் வியட்னாம், பேங்காக், சீனா போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அந்தப் பகுதிகளில் இருந்து வரும் விமானங்களிலேயே திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வதாக விமானி ஒருவர் த ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்